உள்ளூர் செய்திகள்

நெருப்புக்கோட்டை (2)

சென்றவாரம்: பெரியப்பா மகேந்திர வர்மரை சந்திக்க, குதிரையில் பயணித்தான் இளந்தென்றல். இளவரசனின் வலிமையை சோதிக்க தந்தை அவனீந்திரா பின் தொடர்ந்தார். இளவரசனின் குதிரை, முன் செல்லாமல் ஆர்பாட்டம் செய்தது. இனி -மூங்கில் பாலத்தின் மீது ஒரு பயங்கரமான கரடி! தன் பின்னங்காலால் நின்றபடி முன்னங்கால்கலை ஆட்டி அசைத்து, வாயைத் திறந்து உறுமியபடி, தாக்க வருவது போல நின்ற அந்தக் கோலம் கண்டு, இளவரசனுக்கு மூச்சே நின்று விட்டது.இதயம் படபடத்தது; குதிரையைப் பற்றி இருந்த பிடி, தளருவது போலிருந்தது. பீதியால் உடல் குப்பென்று வியர்த்தது. இத்தனைக்கும் வாள், வேல், வில், ஈட்டி இவற்றில் பயிற்சி பெற்றவன்தான் இளவரசன். அரண்மனையின் போர்ப்பயிற்சி மைதானத்தில்தான் அவன் சாகசமெல்லாம். கானகத்திலே காட்டு விலங்கின் முன் அவன் போனதே இல்லை. கதிகலங்கியவனாய், என்ன செய்வதென்று புரியாமல் குழம்பிப் போயிருக்கும் போது, கரடியின் உறுமலைக் கேட்ட குதிரை, கிலி கொண்டு, நாலுகால் பாய்ச்சலில் திரும்பி ஓடலாயிற்று. நல்ல வேளையாக அதன் கழுத்தை கெட்டியாக பிடித்து, குதிரையின் முதுகில் படுத்தபடி, அதன் உடலோடு அப்பிக்கொண்டான் இளவரசன். குதிரையை அடக்கிச் செலுத்தத் திறமையில்லாத இளவரசன், குதிரையின் போக்குக்கு விட்டுத் திரும்பி ஓடுவதைக் கண்டு, கரடி பலமாகச் சிரித்தது. உடனே, மறைவாகக் கட்டி இருந்த தம் குதிரை மீது ஏறி, விரைவாக சுரங்கப்பாதை வழியே தம் ரகசிய அறைக்கு வந்து, வேஷத்தைக் கலைத்துவிட்டு தோல்வியோடு ஓடிவரும் தம் மூத்த மகனை வரவேற்கக் காத்திருந்தார் மன்னர்.ஆர்ப்பாட்டமாகச் சென்றவன், அவமானத்தால் தலை குனிந்து, ஆடைகள் குலைந்து, தள்ளாடித் தடுமாறியபடி, குதிரையிலிருந்து அலங்கோலமாக இறங்கும் இளவரசனை பார்த்தார்.''மகனே, ஏன் திரும்பி விட்டாய்? எதையாவது மறந்து போனாயா? மறுநாளே இவ்வளவு அவசரமாகத் திரும்புவதற்கு, ஏதாவது முக்கிய காரணம் இருக்க வேண்டுமே? என்ன கோளாறு, என்ன நடந்தது?'' என்று ஏதுமறியாதவர் போலக் கேட்டார்.உடைந்த குரலில் பட்டத்து இளவரசன் இளந்தென்றல், தலை நிமிராமல் பதில் கூறினான்.''நான் எதையும் மறந்து விட்டு போகவில்லையப்பா!''''பின் ஏன் திரும்பி வந்துவிட்டாய்?''''இன்று அதிகாலையில் நம் நாட்டின் எல்லையை அடுத்து ஓடும் காட்டாற்றின் கரைக்கு போய்ச் சேர்ந்தேன். அதுவரை என் குதிரை நன்றாகத்தான் இருந்தது. ஆற்றைக் கடக்க மூங்கில் பாலத்தின்மீது போக முற்பட்ட போதுதான் அது நிகழ்ந்தது. குதிரை ஒரு அடி கூட முன் போகாமல் முரண்டு பிடித்தது. என்னைக் கீழே தள்ளிவிட்டு ஓட முயன்றது.'' நல்ல வேளை, என் திறமையால் அதன் கடிவாளத்தையும், பிடரி மயிரையும் இறுகப் பற்றியவாறு அதன் முதுகில் இருந்து விழாமல் சமாளித்தேன். ஏனோ தெரியவில்லை. அந்தக் குதிரை முன்னால் போக மறுத்தது. கந்தர்வபுரியை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் திரும்ப ஓடி வந்துவிட்டது,'' என்று சாமர்த்தியமாகப் பொய் பேசினான் இளவரசன்.அரசர் மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.''அப்படியா? நீ தானே லாயத்திலிருந்த குதிரைகளில் உயர்ந்ததாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாய். குதிரையும் கம்பீரமாகத்தானே இருந்தது. ஏன் அப்படி அது பாதி வழியில் பயந்து போய் திரும்பி ஓடி வர வேண்டும்?''''அது ஒன்றுமில்லேப்பா! பாலத்தில் ஒரு சின்னக் கரடி நின்று கொண்டிருந்தது. காடென்றால் கரடி, புலி, சிங்கம் இருக்காதா? இதற்குப் போய்ப் பயப்படலாமா? கழுதைக்குப் பிறந்த இந்த மோசமான குதிரை, கரடியைக் கண்டு பயந்து போய் என்னையும் கீழே தள்ளிவிட்டு ஓடப் பார்த்தது. நல்ல காலம், என் திறமையால் அதை ஒரு வழியாக அரண்மனைக்கு விரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தேன்!'' என்றான்.''அப்படியானால் வேறு குதிரையைத் தேர்ந்தெடுத்து கிளம்புகிறாயா?''''வேண்டாம் அப்பா. எனக்கு வெறுத்துப் போச்சு. வேறு யாரையாவது அனுப்புங்கள். எனக்கு உங்களுடைய இந்த ராஜ்யமே போதும். பெரியப்பாவோட சாம்ராஜ்யத்தின் மீது எனக்கு ஆசையில்லை. நாம் என்ன சாகாவரம் பெற்றவர்களா? என்றென்றும் இந்த ராஜ்யங்களை ஆண்டு, செல்வங்களை அனுபவிக்க? இல்லையே... ''அதிக ஆசைப்பட நான் விரும்பவில்லையப்பா. காட்டிலும், மேட்டிலும் அலைந்து கானகத்து மிருகங்களைச் சந்தித்து, பாடாய்ப் பட்டு அப்படி என்ன வேண்டிக் கிடக்கிறது? சக்கரவர்த்தி பதவி எனக்கு வேண்டாம். அந்தப் பதவியை வேறு யார் அடைந்தாலும் எனக்குச் சந்தோஷமே,'' என்றான் இளந்தென்றல்.''மகனே, நீ மன்னனாகி ஆட்சி புரிய தகுதியற்றவன். அரியணை ஏறி நீயும் அவதிப்பட்டு, குடிமக்களையும் அவதிக்குள்ளாக்குவாய். ஆகவே, அதிலிருந்து விலகிப் போவது நல்லதுதான். ஆனால், என் அண்ணாவிற்கு நான் என்ன பதில் அனுப்புவது? என் பிள்ளைகளில் யாருக்கும் சக்கரவர்த்தியாகும் திறமையோ, தகுதியோ கிடையாது என்றுதான் எழுத வேண்டும்.'' என்று வேதனை கலந்த குரலில் கூறினார்.தந்தையின் தாபத்தை அறிந்த இரண்டாவது மகன் இளமாறன் எழுந்து முன் வந்தான்.''தந்தையே! வேதனைப்படாதீர்கள். நீங்கள் விரும்பினால், நான் போகிறேன் பெரியப்பாவின் நாட்டிற்கு,'' என்றான்.''உன் ஆர்வத்தைக் கண்டு சந்தோஷமாகத் தானிருக்கிறது. என் கவுரவத்தைக் காப்பாற்றுவான் என் இரண்டாவது மகன் என்று மகிழலாமா? நீயும் உன் குதிரையும் வழியில், ஏதாவது நரி, முயல் இவற்றைக் கண்டு பயந்து ஓடி வரமாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? உன் அண்ணனைப் போல. போன வேகத்தோடு நீயும் திரும்பி ஓடி வந்தால் பிறர் கேலிக்கு ஆளாக நேரிடும். ''ஆனாலும், நீ முயற்சி செய்வதில் தவறில்லைதான். அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்து, நீ மரகதபுரியின் சக்கரவர்த்தியானால், கந்தர்வபுரி கர்வப்படும்தான். உன் திறமையையும், அதிர்ஷ்டத்தையும்தான் பார்த்துவிடுவோமே! உன் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொள்; நாளைக்கே புறப்படு. என் ஆசியும், அனுமதியும் உனக்கு உண்டு,'' என்று கூறிய அரசர் அவையிலிருந்து தம் அந்தப்புரத்திற்கு சென்றார்.தன் அண்ணனை விட அதிக அக்கறையும், எச்சரிக்கையும் எடுத்துக்கொண்டு, நீண்ட பயணத்துக்கு வேண்டிய சகல ஏற்பாடுகளுடன் புறப்பட்டான், இரண்டாவது இளவரசன் இளமாறன்.கந்தர்வபுரி மக்கள் கரகோஷமிட்டு வழி அனுப்பி வைத்தனர். மினு மினுவென்று பளபளக்கும் உடல் கொண்ட கம்பீரமான குதிரை மீது, பளபளவென்று ஜொலிக்கும் கவசமும், ஒளி வீசும் வாளும் ஏந்தித் தலை நிமிர்ந்து சென்றான் இரண்டாவது இளவரசன். அவன் சென்றதும், பாதாள வழியில் விரைந்து சென்று மீண்டும் கரடித் தோலைப் போர்த்தியபடி பாலத்தில் வந்து பயமுறுத்துவதற்காக நின்றிருந்தார் அவனீந்திரா.இதைப் பார்த்த இரண்டாவது மகனும், பயந்து, குதிகால் பிடரியில் பட ஓடுவதைக் கண்டு வேதனையுடன், அவனுக்கு முன்னால் குறுக்கு வழியில் அரண்மனைக்கு வந்து அவனை வரவேற்க காத்திருந்தார் அவனீந்திரா.அவனைக் கண்டதும், ''மகனே நீயும் அதே கரடிக் கதையைத்தானே கூறப்போகிறாய்?'' என்றார் அவனீந்திரா.''கதையில்லையப்பா, அந்தக் கரடியைப் பற்றி, அண்ணன் கூடச் சரியாகச் சொல்லவில்லை'' என்றான் இரண்டாவது இளவரசன்.''ஓஹோ! நீ ஆராய்ச்சியே நடத்தித் திரும்பியிருக்கிறாயாக்கும்,'' என்று ஏளனமாக ஆனால் ஏக்கத்துடன் சிரித்தார் அரசர்.''ஒருவன் கூறினானாம். எனக்குப் புலியைக் கண்டால் கூடப் பயமில்லை, அந்தப் புறாக்குஞ்சை மட்டும் விரட்டுங்கள் என்று. அப்படி இருக்கிறது நான் பெற்ற பிள்ளைகளின் வீரம்!'' என்று பெருமூச்சு விட்டார்.''இப்படியெல்லாம் புதிர் போடாதீர்கள் அப்பா. அந்தக் கரடியை நீங்கள் பார்த்திருந்தால் புறாக்குஞ்சு உவமானம் கூற மாட்டீர்கள்!''சிரிப்பை அடக்கிக் கொண்டார் மன்னர்.''நிஜந்தான், நீங்கள் பீதி கொள்ளும் கரடியை நான் கண்டதில்லைதான்! ஆனால்... இல்லாத ஒன்றைக் கண்டு இருப்பதாக நடுங்குபவர்களைப் பற்றியே நான் கூறினேன்!''''ஒரு பெரும்படையையே அழிக்கும் ஆற்றல் படைத்த அத்தனை பயங்கரமான கரடி அப்பா அது. நான் உயிரோடு திரும்பி வந்தது நீங்கள் செய்த புண்ணியம்தான்!''''அப்படியா? அப்படியானால் உனக்கு சாம்ராஜ்யமும் வேண்டாம், நீ சக்கரவர்த்தியாகவும் பிரியப்படவில்லை அல்லவா?''''எனக்கு எதுவுமே வேண்டாம். நம் நாட்டில் சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை. வயிறார திருப்தியாக மூன்று வேளை கிடைக்கிறது. அதுபோதும் எனக்கு!'' என்றான் இளமாறன்.''நிஜந்தான் சாப்பாட்டு ராமன்களான பிள்ளைகளைப் பெற்றதற்கு, நான்தான் வெட்கப்பட வேண்டும். சமையலறைக்குப் போய்ச் சுடச்சுட சாப்பிடு போ. ''மூன்று பிள்ளைகளைப் பெற்று என்ன? ஒருவனாவது என் கவுரவத்தைக் காப்பாற்றுபவனாக இல்லையே! என் அண்ணாவைப் போல எனக்கும் பெண்களாகப் பிறந்திருந்தால் இப்படி அவமானப்பட வேண்டாம்,'' என்று வேதனையில் வெடித்துப் போனார் மன்னர்.அவையில் அமைதி நிலவியது. எல்லாரும் தலைகுனிந்தபடி இருந்தனர். இரண்டாவது இளவரசன் தன் உடைகளைக் களைந்து, அடுக்களை நினைவோடு அந்தப்புரத்துக்கு போனான்.தந்தையின் வேதனைமிக்க வார்த்தைகளினால் உடல் குன்றிப்போய், முகம் சிவக்க, கண்ணீர் வழிய உட்கார்ந்திருந்தான் மூன்றாவது இளவரசன் இளங்குமரன்.- தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !