உள்ளூர் செய்திகள்

புத்திசாலி எலிகள்!

அமெரிக்கா, ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ராபர்ட் ரோசந்தால் ஓர் ஆய்வு நடத்தினார். அதற்காக, மாணவர்களை, மூன்று குழுக்களாக பிரித்தார். முதல் குழுவிடம் சில எலிகளை கொடுத்து, 'இவை மிகவும் புத்திசாலிகள்; எதைச் செய்ய சொன்னாலும் புரிந்து செய்யும் திறன் பெற்றவை; சிக்கலான சூழல்களில் கூட, எளிதில் வழி கண்டு வெற்றி பெறும்...' என்றார்.இரண்டாவது குழுவிடம், 'ஓரளவு புத்திசாலி எலிகள் இவை; ஒன்றுக்கு இரண்டு முறை எதை சொன்னாலும் புரிந்து செயல்படக் கூடியவை; சிறிது சிரமத்துடன் முயற்சி செய்தால் ஓரளவு ஒத்துழைக்கும்...' என, சில எலிகளை கொடுத்தார்.மூன்றாவது குழுவிடம் சில எலிகளை கொடுத்து, 'இவை மிகவும் மந்தப் புத்தி உடையவை; எந்த வகை பயிற்சி கொடுத்தாலும், நிறைவேற்றும் திறனற்றவை; இவற்றிடம் எவ்வித திறனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது...' என்றார்.மூன்று குழுவினரும், 20 நாட்களுக்கு தங்களிடம் உள்ள எலிகளுக்கு சில பயிற்சிகள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.முதல் குழுவினர் தந்த உற்சாகத்தால் நல்ல செயல் சார்ந்த பயிற்சிகளை எளிதாகக் கற்றுக் கொண்டன எலிகள்.இரண்டாவது குழுவினர் எலிகளைப் பயிற்றுவிக்க சிறிது சிரமம் இருப்பதாக கூறினர். மூன்றாவது குழுவினர், 'இந்த எலிகள் மிகவும் மோசம்; பேராசிரியர் கூறியது போல, இவற்றால் எந்த முன்னேற்றமும் அடைய முடியாது...' என்றனர்.ஆராய்ச்சி முடிவு நாளன்று அனைத்து குழுவும் கூடியது. அவர்களிடையே பேசிய பேராசிரியர், 'மூன்று குழுவுக்கும் ஒரே இடத்திலிருந்து பிடித்த எலிகள் தான் தரப்பட்டன. எவ்வித பயிற்சியும் தரப்படவில்லை; இப்போது மூன்று விதமாக செயல்படுகின்றன எலிகள். ஒவ்வொரு குழுவின் எண்ண அடிப்படையிலே அவை செயல்படுகின்றன. இதற்கு காரணம், பயற்சி அளித்தவர்கள் கொண்டிருந்த மனோபாவம்தான்...'நல்ல எண்ணத்துடன் அணுகினால் சிறப்பானதை மட்டுமே காண முடியும்; அதே நோக்கத்தில் அளிக்கும் பயிற்சி நல்ல பண்புகளை மட்டும் மேலோங்க வைக்கும்...' என்றார்.குழந்தைகளே... நல்ல எண்ணத்துடன் பழகுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !