உள்ளூர் செய்திகள்

பசுவும் புலியும்!

காட்டில், சுதந்திரமாக மேய்ந்து கொண்டிருந்தது வெள்ளைப் பசு; திடீரென, ஒரு புலி பாய்ந்து வருவதைக் கண்டு, தப்ப வழி தேடியபடி ஓடியது. வற்றிய குட்டையைக் கண்டது. தப்ப எண்ணி, அதற்குள் குதித்தது. துரத்தி வந்த புலியும், பசுவை கொன்று தின்னும் நோக்கில் அதிவேகமாக பாய்ந்தது.பசுவும், புலியும் எண்ணியதைப் போல், அது வற்றிப்போன குட்டை அல்ல; சேறு நிரம்பிய பாழுங்குட்டை. மேற்பரப்பில், சேறு காய்ந்திருந்ததால், வற்றிய தோற்றம் கொண்டிருந்தது.குட்டைக்குள் பாய்ந்த இரண்டும், கழுத்து வரை புதையுண்டு கிடந்தன. எவ்வளவு முயன்றும், கால்களை அசைக்க இயலவில்லை. எப்படி தப்பி பிழைப்பது...'உன்னை எப்படியாவது கொன்று, உன் எலும்புகளை, 'கடுக்... முடுக்...' என, என் பற்களால் உடைப்பேன்...' என்று உறுமியது புலி. ஆனால், தப்ப வழி இல்லாததால் கோபாவேசம் அடங்கி அமைதியானது. அதைப் பார்த்து சிரித்தபடியே, 'உனக்கு எஜமான் இருக்கிறாரா...' என்றது பசு.'காட்டில் மிகவும் வலிமை வாய்ந்த புலி நான்; எனக்கு எதற்கு எஜமான்... நான் தான் காட்டுக்கே எஜமானாயிற்றே...' என, உறுமியது.'நீ வலிமையானவன் என்பதை ஒத்துக் கொள்கிறேன்; இப்போது உன் நிலை என்ன... என்ன முயற்சி செய்தாலும், தப்ப முடியாதே. என்ன செய்யப் போகிறாய்...' 'உனக்கும் அதே கதி தானே... நீ மட்டும் சேற்றிலிருந்து தப்ப முடியுமா... புதைந்து சாகத்தானே போகிறாய்...' 'நான் சாக மாட்டேன்... இன்று மாலைக்குள் தப்பி சென்று விடுவேன்...' பசுவின் பதில் கேட்டு, 'வலிமை மிக்க என்னாலேயே முடியாத போது, சாதுவான உன்னால் எப்படி முடியும்...' என்றது புலி.'என்னால், முயன்று வெளியே வர முடியாது என்பது உண்மை தான்... ஆனால், என் எஜமான் காப்பாற்றுவார். மாலைக்குள் நான் வீடு திரும்பாவிட்டால், என்னை தேடி வந்து, விடுவித்து அழைத்து செல்வார்...' என்று நம்பிக்கையுடன் கூறியது.புலிக்கு ஒன்றும் புரியவில்லை. அது, திரு திருவென விழித்தது.சூரியன் மறைந்த போது, பசுவின் எஜமான் தேடி வந்தார். அதன் நிலையை அறிந்தார்; ஆபத்தான புலி அருகில் இருப்பதையும் கண்டார். மிகவும் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு, பசுவை சேற்றிலிருந்து விடுவித்தார். கரையேறிய பசு, மகிழ்ச்சியாக அவருடன் சென்றது. கர்வம் கொண்ட புலி, சேற்றில் புதைந்து, தப்ப முடியாமல் துவண்டது.மழலைகளே... சுதந்திரமாக சிந்தித்து செயல்படுவது நல்லது தான். ஆனால், ஒரு நல்ல நண்பனையோ, குருவையோ துணையாக வைத்திருப்பது அவசியம். பலவீனமாகும் போது, அவர்கள் தரும் அறிவுரை காப்பாற்றும். மேலும், வலிமையாக செயல்பட உதவும்.பி.புவனேஸ்வரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !