உள்ளூர் செய்திகள்

டெல்பி!

புராதன கிரேக்கர்களின் காலத்து நகரம் டெல்பி. ஏதென்ஸ் நகரம் சமுதாய மற்றும் அறிவாளி களின் மையமாக விளங்கியது. விலைமதிப்பற்ற கலைப் பொருள்களையும், இலக்கியங்களையும் கொண்டதாக விளங்கியது. ஒலிம்பியா விளையாட்டு போட்டிகள் நடத்தும் அரங்கங்களைக் கொண்டிருக்கிறது. காரிந்த் என்னும் நகரத்தை மாலுமிகளின் நகரம் என்று கூறுவர். இந்த வகையில் டெல்பி நகரம் தெய்வங்களின் வாக்கை அறியும் (அசரீரி) இடமாகக் கருதப்பட்டது. மனித சமுதாயத்துக்குக் கடவுளர்கள் இங்குள்ள கோயிலில் வாழும் பூசாரிகள் மூலமாக கட்டளைகளிடுவார்களாம்!இது எப்படி?ஸீயஸ்-லெட்டோ கடவுளர்களின் மகன் 'அப்போலோ'. அழகானவன்; தங்க நிறமான தலை முடியுடைய அப்போலோ பிறந்த போது நீலவானத்திலே கையில் 'ஹார்ப்' என்னும் வில்போன்ற நரம்பு வாத்தியத் துடன் மிதந்து கொண்டிருந்தான். தோளிலே வெள்ளியி னாலான வில் அம்புறாத்தூணியில் தங்க அம்புகள் கல கலத்துக் கொண்டிருந்தன. மக்களுக்கு நல்லது செய்வதே அப்போலோ கடவுளின் கடமை. மனிதனால் உருவாக்கப் பட்ட இயற்கையினால் உருவான அழகுப்பொருள்கள் அனைத்துக்கும் காவலன் அப்போலோ.சூரிய ஒளியையும், வெளிச் சத்தையும் நேசிப்பவன். இருள், கர்வம், தீச்செயல்களை வெறுப்பவன் அப்போலோ. இவன் மிகவும் வெறுப்பது 'பைத்தான்' எனப்படும் மலைப் பாம்பைத்தான். கடல்வாழ் பாம்பான இது அச்சமூட்டும் தோற்றமுடையது. அப்போலோவை லெட்டோ கருவுற்றிருந்த போது, கர்ப்பிணித் தாயான லெட்டோ டெலாஸ் தீவில் அப்போலோவை பெற்றெடுக்கும் வரை அவளைத் துரத்தித் துன்புறுத்தியது இப்பாம்பு.அப்போலோ வளர்ந்து வாலிபனானதும் தன் தாயைத் துன்புறுத்திய தற்கு வஞ்சம் தீர்த்துக்கொள்ள பைத்தானை தேடிக் கொண்டிருந்தான். வெகு நாள் வரை 'பைத்தான்' இருக்குமிடம் தெரியவில்லை. எங்கும் அமைதியும், சமாதானமும் நிலவியது. ஆனாலும் அப்போலோ தன் தேடலைக் கைவிடவில்லை.ஒருசமயம் சூரிய ஒளி ஊடுருவாத ஆழமான பள்ளத்தாக்கில் கர்ஜனையுடன் ஓடிக்கொண்டிருந்தது ஒரு நதி. அப்பள்ளத் தாக்கிலிருந்து பசுமை நிறத்தோடு கூடிய நாற்றமடிக்கும் வாயு, மேகத்தை மறைக்கும் படி எழுந்து கொண்டிருந்தது. தான் தேடும் அப்பாம்பு அரக்கன் இதுதான் என்பதை அப்போலோ உணர்ந்தான். பள்ளத் தாக்கில் இறங்கலானான்.அப்போலோ நெருங்குவதைக் கண்ட மலைப்பாம்பு பயங்கரமாகக் குரலெழுப்பிப் பெருமூச்சு விட்டுச் சீறியது. நீண்ட உடலை விரைப்பாக்கிக் கொண்டு அப்போலோவைக் கடிக்கத் தன் பெரிய வாயைப் பிளந்து கொண்டு எழும்பியது.அப்போலோ அந்தப் பாம்பரக்கனை எதிர்க்க ஆயத்தமானான். தன் வெள்ளி வில்லைத் தோளிலிருந்து எடுத்தான். அதில் தங்க அம்புகளை அடுத்தடுத்து பைத்தானின் குரல் வளையை நோக்கிச் செலுத்தினான். மலைப்பாம்பு வலியினால் துடித்து சுருண்டது. கோரமாகக் கூச்சலிட்டது. வாலைச் சுழற்றிப் பெரும் பாறைகளைத் தாக்கி, பெரும் கற்கள் அப்போலோ மீது விழும்படி செய்தது. ஆனால், அதன் வால் தாக்குதலினால் இடம் பெயர்ந்து சரியாக பாறைகள் அதன் மீதே விழுந்து அதற்குச் சமாதி கட்டியது.மலைப்பாம்பின் வாழ்வு முடிந்ததும் அப்போலோ தன் 'ஹார்ப்' வாத்தியத்தை மீட்டி வெற்றி முழக்க மிட்டான். சூரிய ஒளி இருளை விரட்டிக் கொண்டு கணவாயினுள் புகுந்து பளீரிட்டது. குளிரினால் உறைந்து கிடந்த பாறைகளில் கதகதப்பு உண்டாயிற்று. பசும்புற்கள் தலை தூக்கிச் சிரிக்கலாயிற்று. புதர்களும், மரங்களும் திடீரென்று பூக்கத் தொடங்கிற்று. பறவைகள் கீதமிசைத்தப்படி பள்ளத்தாக்கில் பறக்கலாயின. பள்ளத்தாக்கின் பாறைச் சரிவுகளில் மிருகங்கள் சறுக்கு விளையாடி மகிழ்ந்தன. வன தேவதைகள் மிருகங்களின் விளையாட்டுத் தோழிகளாக வந்தனர்.அப்போலோவிற்கு அவன் தந்தை ஸீயஸ் இட்டிருந்த கட்டளை நினைவுக்கு வந்தது.'உலகிற்குப் போய் தெய்வ வாக்குக் கூறும் ஓர் ஆலயத்தை உருவாக்கு' என்று கூறியிருந்தார் ஸீயஸ். அவர் ஆணைப்படி 'தெய்வவாக்கு' கூறும் ஆலயத்தை உருவாக்க ஏற்ற இடம் இந்த கணவாயே என்று தீர்மானித்தான் அப்போலோ. குறி சொல்லும் கோவில் நகரை ஸ்தாபித்தான். கோவில் பூசாரிணியாக பைதியா என்ற பெண் நியமிக்கப்பட்டாள். உலகின் பல பாகங்களிலு முள்ள மன்னர்களும், மகாராணிகளும், சாதாரணக் குடிமக்களும் தங்கள் குறைகளைக் கூறி துன்பங் களை விவரித்து அவற்றுக்குப் பரிகாரம் என்ன என்பதைப் பல்வேறு கடவுளர்களிடம் கேட்டுக் கூறும்படி பூசாரிணி பைதியாவை அணுகினர். கடவுளர்களுக்கும் மனித இனத்துக்குமிடையே தூதாக, பாலமாக செயல்பட்டாள் பைதியா. இவ்வாறு கடவுளர்களின் கட்டளைகளை அறிந்து செல்லும் நகரமாக விளங்கியது டெல்பி.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !