டெவில்ஸ் போஸ்ட்பைல்!
அமெரிக்காவில் ஒரு தேசிய சின்னத்தின் பெயர், டெவில்ஸ் போஸ்ட்பைல். கிழக்கு கலிபோர்னியா மாநிலம், மாமத் மலை அருகில், 798 ஏக்கரில் பரவியுள்ளது. இங்கு, நெடுவரிசையில், 'பாசால்டு' என்ற பாறை வகையை காணலாம். இது, அடுக்கி வைத்திருப்பது போல் சாய்ந்து, சரிந்து வளைந்திருக்கும். பூமியில், 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன், உருவானதாக கண்டறிந்துள்ளனர் புவியியல் அறிஞர்கள். நெடுவரிசை தவிர, சதுரம், அறு கோண வடிவில் பாறை உடைந்து, நொறுங்கி கிடப்பதையும் காணலாம். இது பரவியிருக்கும் பரப்புக்குள், அழகிய நீர்வீழ்ச்சி உள்ளது; விழும் நீரில், வானவில் போல் வண்ணங்கள் உருவாவதை ரசிக்கலாம். இந்த பகுதியில், தங்கம் அதிகம் இருப்பது, 1910ல் கண்டறியப்பட்டது. இந்த பாறைகளை உடைத்து, தங்கச் சுரங்கம் அமைக்க அரசு முயற்சித்தது. இதற்கு கலிபோர்னியா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜனாதிபதியிடம் மனு கொடுத்தனர். உடனே பாறைகளை உடைக்க தடை விதிக்கப்பட்டது. அத்துடன், அதை தேசிய சின்னமாக அறிவித்து, நிர்வகிக்கும் பொறுப்பை அமெரிக்க தேசிய பூங்கா கமிட்டியிடம் கொடுத்துவிட்டது அரசு.இதையடுத்து அந்த பகுதி சுற்றுலா இடமாக மாறியது. தினமும் ஏராளமான பயணியர் வரத்துவங்கினர். பாறை, நீர்வீழ்ச்சி, மலையேற்ற வசதி இருப்பதால் பயணியர் வரத்து அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாக இப்போது திகழ்கிறது.- ராஜிராதா