உள்ளூர் செய்திகள்

டைனோ என் தோழன்! (11)

முன்கதை: சந்திரஜெயனும், மாமாவும், பூகம்பத்தில் சிக்கிய போது, பனிகட்டிக்குள், டைனோசர் உடலைக் கண்டனர். அதில் ஒரு துண்டை வெட்டி எடுத்து வந்து, பரிசோதனை செய்தார் மாமா. இனி -அறைக்கு நடந்தார் விஞ்ஞானி யோகிபாபு; ராட்சஷ தொட்டியில், திரவம் ததும்பியது. ''இதென்ன மாமா...'' என்றான் சந்திரஜெயன்.''உயிர் திரவம் நிரம்பிய தொட்டி; இதில், டைனோசரின் உடல், தசை, எலும்பு, நரம்பு என, அனைத்தும் உருவாக தேவையான உயிர் சத்து இருக்கிறது; இடமும், வலமும் ஆடியபடியே இருக்கும்; குழந்தை பெற்று, தாலாட்டுவது மாதிரி, உயிர் திரவத்தை தாலாட்டபோகிறேன்...''''அதனால் என்ன ஆகும்...'' ''பண்டைய காலத்தில், உயிர் திரவம் ததும்பி, ஒற்றை செல் உயிரி உருவானது என குறிப்பு இருக்கு. இந்த உயிர் திரவத்தில், கண்டுபிடித்த மரபியல் வரைப்படத்தை செலுத்தினால், அதில், 120 அடி உயரமுள்ள டைனோசர் உடல் உருவாகும்; ஆனால், நான் அப்படி செய்ய விரும்பல...''உயிர் திரவ தொட்டிக்குள், போன்சாய் தொழில் நுட்பத்தை சேர்த்து செலுத்தி, ராட்சஷ வளர்ச்சியுள்ள ஆலமரத்தை, அரையடி மரமாக குறுக்குகிறோம் இல்லையா... அதை போல், குட்டி டைனோசரை உருவாக்க போகிறேன்...''இந்த டைனோசரின் உடல் கவர்ச்சியுடன், மிகவும் குட்டியாக இருக்கும்; இதை துாக்கி கொஞ்சலாம்; காய்கறி, பழங்களை மட்டும் தான் அது உண்ணும்; இதன் வாழ்நாள், 100 ஆண்டுகள். குட்டி டைனோசரை உருவாக்கி, உன் பிறந்த நாள் பரிசாக அளிப்பேன்...'' என்றார் யோகிபாபு.''என் மகிழ்ச்சியை பிரதானமாக கருதாதீங்க; உங்கள் ஆராய்ச்சிக்காக, நோபல் பரிசு வாங்க வேண்டும்...''''ஆராய்ச்சியின் துவக்கம், டைனோசர் குட்டியை உன்னிடம் அளிப்பது தான். அது எப்படி வளருது; அதன் பழகும் முறை எப்படி இருக்கும்; மக்கள் எப்படி பார்ப்பர்; மற்ற மிருகம், டைனோசரை எப்படி எதிர்கொள்ளும் என்பது போன்றவற்றை ஆராயப் போகிறேன்...''''என்னை பரிசோதனை கூட எலி மாதிரி ஆக்க போறீங்க...''''இல்லை... இந்த ஆராய்ச்சி, 'ஜெனிடிக் இன்ஜினியரிங்' உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது...''''உயிர் திரவத்தில், போன்சாய் செய்த டைனோசர், மரபியல் வரைப்படத்தை செலுத்த போறீங்க; பின், எப்படி அந்த உடலுக்கு உயிரை கொண்டு வருவீங்க மாமா...''''எல்லாமே நானே சொன்னால் எப்படி... காத்திருந்து பார்...''உயிர் திரவ தொட்டியை கணினியுடன் இணைத்தார்; அனிமேஷன் மூலம், தொட்டிக்குள் நடப்பது தெரிந்தது.நாட்கள் நகர ஆரம்பித்தன.தினமும், காலையில் இருவரும், உயிர் திரவ தொட்டியை பரிசோதிப்பர்.அந்த அறையை கண்காணித்த மினிரோபோ, ''நீங்க ரொம்ப மோசம் பாஸ்...'' என்றது.''ஏன் மினி... இப்படி சொல்ற...'' என்றார் யோகிபாபு.''டைனோசரை சந்திரஜெயனுக்கு, பரிசளிக்க போகிறீர்; நான் என்ன பாவம் செய்தேன்; எனக்கொரு, டைனோ குட்டி பரிசளிக்கக் கூடாதா...''''டைனோ... செல்லமா கூப்பிட நல்லாயிருக்கே... நான் உருவாக்குற, டைனோசருக்கு இந்த பெயர் தான், சூட்டப் போறேன். உனக்கு, ஒரு குட்டி ரோபோ செய்து, பரிசளிக்கிறேன்... அதை வெச்சு கொஞ்சு மினி...''''கொடுங்க பாஸ்... எதை பரிசா கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிப்பேன்...''சில நாட்களுக்கு பின் - கணினியில், டைனோவின் அனிமேஷன் உருவம் தெரிந்தது. திருப்பி திருப்பி எல்லா பரிமாணங்களிலும் ஆராய்ந்தார்; அதன் வடிவம் திருப்தி அளித்தது. இனி, உயிர் மட்டும் தான் கொடுக்க வேண்டும்; உயிர் திரவ தொட்டியை நோக்கி, கருவியை திருப்பினார்.'பளிச்... பளிச்...'மின்னல் வெளிச்சத்தை வீசியது அக்கருவி.தொட்டியின் மைய பகுதியை உற்று நோக்கினார்.''ஆராய்ச்சியின் முக்கிய கட்டத்தை நெருங்கி விட்டோம் மருமகனே...'' என்றார் யோகிபாபு.டைனோ உடல், உயிர் திரவத்தின் மேல் மிதந்தது; ஆராய்ச்சிக் கூடத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன; மின்னல் வரும் கருவியை இயக்கினார்.'ஸ்ப்ளாச்' என ஒலி சத்தத்துடன், ௧௦ ஆயிரம் வோல்ட் மின்சாரம், நொடியில் டைனோ உடல் மீது, சாட்டையை சொடுக்கியது.'கர்ரக்... முர்ரக்...' என சத்தம் கேட்டது.ஆராய்ச்சி கூடத்தில் விளக்குகள் உயிர்த்தன; டைனோவின் உடல் மெதுவாக அசைந்தது; உயிர் திரவத்தில் நீந்தி விளிம்புக்கு வந்தது; குனிந்து டைனோவை அள்ளினார் யோகிபாபு.வாயை திறந்து, 'ழியேய்...' என சத்தம் போட்டு, யோகிபாபுவின் கைகளை நக்கியது.கீழே விட்டதும், 'தாவி... தாவி...' குதித்து விளையாடியது.பூரித்தான் சந்திரஜெயன்.'ஐ லவ் யூ டைனோ...' என்ற குரல், ஆராய்ச்சி கூடம் முழுக்க எதிரொலித்தது.- தொடரும்...- வஹித்தா நாசர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !