உள்ளூர் செய்திகள்

ஒழுக்கம்!

சென்னை, மண்ணடி, முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 9ம் வகுப்பு படித்தபோது, என்.சி.சி., என்ற தேசிய மாணவர் படையில் சேர மிகுந்த விருப்பம் கொண்டிருந்தேன். அந்த சீருடையின் மிடுக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும், சென்னை உயர்நீதிமன்ற வளாகம் பின்புறம் பெரிய மைதானத்தில் அணிவகுப்பும், பயிற்சியும் நடக்கும். தலைமை ஆசிரியர் ஜம்புலிங்கமே அதற்கும் பொறுப்பு வகித்தார். அவர், ஒழுக்கம், நேரம் தவறாமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.எடை குறைவாக இருந்ததால் பயிற்சிக்கு என்னை இரண்டு முறை தேர்வு செய்யவில்லை. மூன்றாம் முறை அவரை கெஞ்சி கூத்தாடி மன்றாடினேன். என் ஆர்வம் கண்டு, முயற்சித்து எடையை அதிகரித்த பின் சந்திக்க சொன்னார்.உடனே தைரியத்தை வரவழைத்து, 'ஐயா... வறுமையான குடும்பத்தை சேர்ந்தவன் நான். அணிவதற்கு செருப்பு கூட இல்லை. வெறுங்காலில் நடந்து வருகிறேன். வீட்டில் காலை உணவாக பழைய சோறு தான் கிடைக்கிறது. இதில் சேர்ந்தால் வாரத்தில் ஒரு நாளாவது காலை சிற்றுண்டி சாப்பிடலாம். சீருடையுடன் புது ஷூவும் கிடைக்கும்...' என்றேன்.மனம் கனிந்து அனுமதித்தார். முறையான பயிற்சியுடன், ஒழுக்கத்தை கடைபிடித்து நற்பெயர் பெற்றேன்.தற்போது, என் வயது, 71; தனியார் நிறுவனத்தில், நிர்வாகியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த தலைமை ஆசிரியரிடம் கற்ற ஒழுக்கம், நேரம் தவறாமை வாழ்வில் முன்னேற்றம் தந்துள்ளதை இந்த தருணத்தில் நினைவு கூர்கிறேன்.- கி.வெங்கடகிருஷ்ணன், சென்னை.தொடர்புக்கு: 97909 56566


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !