உள்ளூர் செய்திகள்

விரல நீட்டுடா!

ஏறத்தாழ, 50 ஆண்டுகளுக்கு முன், மதுரை, தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.அப்போது, ஆங்கில பாடம் என்றாலே மாணவர்கள் மனதில் அச்சம் நிலவும். ஆனால், மாணவர்களுக்கு ஏற்படும் அம்மாதிரி எண்ணங்களை அகற்றும் முனைப்புடனே செயல்பட்டார் ஆங்கில ஆசிரியர்.கரும்பலகையில், கேள்வியையும் எழுதி அதற்குண்டான விடையையும் எழுதுவார். அதை அப்படியே நோட்டில் எழுதி முடித்ததும், ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் கூறி விவரிப்பார். பின், அனைவரையும் வாய்விட்டு படிக்க செய்வார். இதனால், உச்சரிப்பு தெளிவாகும் என்பார்.மறுநாள் மீண்டும், அதே விடைகளை வேண்டுமென்றே சில வார்த்தைகளில் தவறான, 'ஸ்பெல்லிங்' உடன் எழுதுவார். அந்த தவறை எந்த மாணவன் உடனே எழுந்து சுட்டிக் காட்டுகிறானோ அவனுக்கு, பென்சில், ரப்பர், மிட்டாய் போன்ற சிறு பரிசுகள் அளிப்பார். இதனால், ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கற்றோம்.மதிய உணவு இடைவேளையின் போது, மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்ணுவார். ஞாயிற்றுகிழமைகளில் விரல்களில் நகம் வெட்ட வேண்டும் என்பார். திங்கள் காலையில் வகுப்பறையில் நுழைந்தவுடன், விரல்களை நீட்ட சொல்லுவார். பள்ளி இறுதி வகுப்பு முடித்து, பள்ளி விட்டு வெளியேறும் வரை அவர் அளித்த ஆங்கில அடிப்படை அறிவு, வாழ்வில் பல நேரத்தில் உதவியாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.- கோ.சு.சுரேஷ், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !