காது குடையும் கருவி!
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே, மங்கநல்லுார், கே.எஸ்.ஓ.உயர்நிலைப் பள்ளியில், 1979ல், 6ம் வகுப்பு படித்தேன். அறிவியல் ஆசிரியர், பாடம் நடத்தி முடித்த பின், பொது அறிவு தகவல்களை கூறுவார்.ஒரு நாள், 'சரளமாக எழுத உகந்தது மை பேனாவா... பால் பாயின்ட் பேனாவா...' என, பட்டிமன்ற நடுவர் போல் கேள்வி எழுப்பினார்.ஒருவன், 'மை பேனாவில், கையெழுத்து நன்றாக இருக்கும்...' என்றான். மற்றொருவன், 'கையெல்லாம் மை ஆகிடும்...' என்றான். இன்னொருவன், 'ரீபில் எளிதாக மாற்றலாம்...' என்றான். இவ்வாறு பல கருத்துகள் கூறினர். நான் எழுந்து, 'பால் பாயின்ட் பேனா தான் சிறந்தது; அவசரத்துக்கு ரீபிலை கழட்டி, காது குடையலாம்...' என்றேன். அனைவரும், 'கொல்' என சிரித்தனர்.திகைத்த ஆசிரியர், 'ஏன்டா பேனாவாலா காது குடைவாய்; இது போல் குதர்க்கமாக யோசிக்கக் கூடாது...' என்று, காதை திருகி, தோப்புக்கரணம் போட வைத்து அறிவுரை வழங்கினார். இப்போது என் வயது, 52; யாராவது காது குடைவதைக் கண்டால் அடக்க முடியாமல் சிரித்து விடுகிறேன்.- ஜெ.ஸ்ரீராமன், சென்னை.தொடர்புக்கு: 91768 83823