உள்ளூர் செய்திகள்

மாலை மரியாதை...

நான், பி.கே.என்., உயர்நிலை பள்ளியில், 1954ல், எட்டாவது படித்தேன். பள்ளியின் ஆண்டு விழாவிற்கு, அப்போதைய தமிழக முதல்வர், கு.காமராஜர் அழைக்கப்பட்டிருந்தார். விழா ஆரம்பமானதும், முதல்வருக்கு மாலை மரியாதை செய்ய தலைமை ஆசிரியர் அருணாசலம், மேடை ஏறியதும், 'கொஞ்சம் பொறுங்கள்... முதலில் என் பள்ளி ஆசிரியருக்கு மரியதை செய்ய விரும்புகிறேன்' என்றார் காமராஜர்.ஆசிரியர் பெருமக்களும், மாணவ - மாணவியர் மற்றும் விழாவில் கூடியிருந்த பொதுமக்களும், வியப்புடன் காமராஜரின் ஆசிரியர் இப்பள்ளியில் இருக்கிறாரா... யார் அவர்... என்று தேடினர், ஒரே சஸ்பென்ஸ்!என், எட்டாம் வகுப்பு ஆசிரியர், கனகரத்தினம் மேடையேறி சென்ற போது, ஒரே கை தட்டல்; ஆரவாரம்!ஆசிரியரை சிரம் தாழ்த்தி வணங்கி, மாலை அணிவித்து, கை கூப்பி வணங்கினார் காமராஜர். கண்கொள்ளா காட்சி. ஆசிரியரும், மாணவரும் மனதால் ஒன்றாயினர். ஆண்டுவிழா பரிசளிப்பு முடியும் வரை, மாணவர்களுடன் இருந்தார் முதல்வர்.பின், அன்று இரவு, திருமங்கலம் பயணியர் விடுதியில் தங்கினார். பாதுகாப்பிற்கு நின்ற காவலரை தூங்குமாறு கூறினார். மறுநாள் காலை, உடுப்பி ஓட்டல் டிபனை, 'கிளர்க்' வாங்கி கொடுத்தார். சிற்றுண்டிக்கு பின், வேறு நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றார்.அந்த காலம் என்று வருமோ...- பி.எ.அழகர்சாமி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !