தீ.... தீ..!
மோகனுக்கு விஷ ஜுரம் வந்து சரியானது. ஆனால், அதன் தொடர்ச்சியாக கால் விளங்காமல், நடக்க முடியாமல் போய் விட்டது. இரண்டடி கூட எடுத்து வைக்க முடியாத நிலை.சுவற்றைப் பிடித்துக் கொண்டுதான் நிற்க முடியும் அவ்வளவுதான். கையில் கம்பு வைத்துக் கொண்டோ, தாங்கு கட்டைகளை வைத்துக் கொண்டோ நடக்கலாம். ஆனால், மோகன் அதை விரும்பவில்லை. வெட்கமாக, அவமானமாக கருதினான். அதனால், வீட்டில் சதா கட்டிலில்தான் படுக்கையில் இருப்பான். ஏதாவது பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பான்; ரேடியோ கேட்பான்.சக்கர நாற்காலி வாங்கித் தருகிறோம் என்ற போது அதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை. முதலில், 'நடக்க முடியவில்லையே...' என்று சிறிது வருந்தினான். பின்பு அந்த வருத்தமும் போய், அதையே சகஜமாய் ஏற்றுக் கொண்டான்.ஆனால், அவன் பெற்றோருக்குத்தான் வருத்தம். படிக்க வேண்டிய வயதில் படிக் காமல், அல்லது படிப்பே வரவில்லையானதால் வேலைக்காவது செல்லலாம். எதற்கும் வழியில்லாமல் இப்படி கட்டிலோடு கட்டிலாக முடங்கிக் கிடக்கிறானே என்று வருந்தினர். வேறு என்ன செய்ய முடியும்?வீடு என்பது ஒரே அறைதான். அதில் கட்டிலில் மோகன் அமர்ந்துவிட்டால், மற்றவர்கள் நடமாட வீட்டில் இடமே இல்லை என்பதால் வீட்டிற்கு பின்புறம் நான்கு சவுக்கு கம்புகளை நட்டு, தென்னை ஓலைகளை வேய்ந்து ஒரு குடிசை அமைத்து தந்தனர். மோகன் குடியிருப்பு, அந்த குடிசைக்கு மாறியது.அவனுக்கும் மற்றவர்கள் பார்வையில் படாமல் ஒதுங்கியிருப்பது பிடித்திருந்தது. குடும்பத்தினருக்கும் 24 மணி நேரமும் கண்ணில் பட்டு வேதனைப்படுவது சற்று குறைந்தது.ஒருநாள் மோகனின் நண்பன் ஒருவர் மோகனைப் பார்க்க வந்தான். அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு. பீடி குடித்துவிட்டு தீக்குச்சியை தூக்கி எறிந்தானோ என்னவோ, கூரை திடீரென்று பற்றி எரிய ஆரம்பித்தது.தீ... தீ என்று கத்திக் கொண்டு ஓடினானே தவிர, மோகனைப் காப்பாற்றவில்லை. நான்கு பக்கமும் நெருப்பு சூழ்ந்தது. எப்படியாவது தப்ப வேண்டும். இல்லாவிடில் நெருப்பில் கருகிக் சாகவேண்டியதுதான். வாழ்வா, மரணமா என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம். மோகன் சாகவிரும்பவில்லை. மனதின் சக்தியை எல்லாம் காலில் சேர்த்து, மெதுவாக எழுந்து நிற்க முயன்றான். பின்னர் சாவி கொடுத்த பொம்மை மாதிரி, ஓட ஆரம்பித்து விட்டான்.தீ...தீ... என்று கூச்சலிட்டவர்கள் கூட, தீயை அணைக்க மறந்து, இவ்வளவு நாட்களாக நடக்க முடியாமல் இருந்த மோகன் ஓடுவதைக் கண் கொட்டாமல் வியப்புடன் பார்த்தனர்.***