தாழ்வு மனப்பான்மையே போ.... போ...!
ஒரு காட்டில் வச்சலா என்ற காகம் இருந்தது. அதன் அலகு சற்றே மடங்கிய நிலையில் அவலட்சணமாக இருக்கும். இதனால் அந்த காகத்திற்கு எப்போதும் தன்னைப் பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஏதாவது ஒரு காக்கை கூட்டத்தைக் கடந்து போகும்போது தன்னைப் பற்றியும், தனது மடங்கிய அலகைப் பற்றியும் மற்ற காகங்கள் கேலி பேசுமோ என்ற சிந்தனையுடன், பதற்றத்துடன் தனது அலகை மறைத்தபடிதான் செல்லும்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள் அவலட்சணமான உடல் அமைப்பு கொண்ட சஞ்சனா என்ற இன்னொரு காகத்தை அது சந்தித்தது. சஞ்சனாவிற்கு உடல் மட்டுமல்ல, அதன் அலகும் கூட ஒரு மாதிரி மடங்கிய நிலையில்தான் இருந்தது. அந்தக் காகத்துடன் ஒப்பிடுகையில், வச்சலா உடல் ஊனம் ஒரு பெரிய குறையாக இல்லை. அதே சமயம் சஞ்சனா காகம் மிகவும் சந்தோஷமாக வாழ்வதையும் மற்ற காகங்களுடன் எந்தவித தாழ்வுமனப்பான்மையும் இன்றி வாழ்வதையும் கண்டு வச்சலா காகம் ஆச்சரியப்பட்டுப்போனது.மெல்ல அதன் அருகில் சென்ற வச்சலா, உடல் ஊனமுற்ற காகத்தைப் பார்த்து மெல்லிய குரலில், ''நீ எப்படி இருக்கிறாய்?'' என்றது.உடனே அதற்கு உடல் ஊனமுற்ற சஞ்சனா பலமான குரலில், ''நீ சொல்வது என் காதுகளில் விழவில்லை. எனக்கு காது கொஞ்சம் மந்தம். அதனால் இன்னும் சத்தமாகப் பேசு,'' என்றது.அதைக் கேட்ட வச்சலா காகம், ''நான் உன்னிடம் என்ன கேட்க நினைத்தேனோ, அதையே நீ சொல்லி விட்டாய். நான் வருகிறேன் நண்பனே,'' என்றவாறு அங்கிருந்து பறந்து விட்டது.நடிட்கள் பல கடந்தன. இந்த நாட்களில் வச்சலா தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்திருந்தது. மடங்கிய தனது அலகினால் தான் தாழ்வுமனப்பான்மை கொள்ளத் தேவையில்லை என்பதை உணர்ந்தது.அதன் பிறகு எந்த காகத்தைக் கண்டாலும் அது பயந்து ஒளிவதில்லை. தவிர, தன்னைப் பற்றி யார் என்ன கேலி செய்தாலும் அதைப் பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் வச்சலா காகத்திற்கு நாளடைவில் அதன் கூட்டத்தில் நல்ல மரியாதையும், மதிப்பும் கிடைத்தது. அடுத்த சில வாரங்களில் அது தனது கூட்டத்திலிருந்த காக்கைகளுக்கு தலைவனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது.ஒருநாள் காட்டில் இருந்த எல்லா காக்கைகளின் கூட்டத் திற்குமான மூத்த தலைவர் காகத்தைச் சந்திக்கும் வாய்ப்பு வச்சலாவிற்கு ஏற்பட்டது. அப்போது மூத்த தலைவர் காகம், வச்சலாவிடம், ''நீ கோழையாக இருந்ததாக கேள்விப்பட்டேன். இப்போது எப்படி நீ புகழ்பெற்றவனாகி விட்டாய்?'' என்றது.''எனக்கு நானே சில நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டேன். யார் எனது ஊனத்தைப் பற்றிக் கேலி செய்தாலும் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நம்மைப் பற்றி மற்றவர்களின் விமர்சனங்கள் நம்மைப் புண்படுத்துவதாக ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும். அதனால் என்னிடமிருந்த தாழ்வுமனப்பான்மையை ஒதுக்கி வைத்துவிட்டு, எங்கள் கூட்டத்தினரோடு கூட்டமாக நானும் கலகலப்பாகப் பேசினேன். எனது தன்னம் பிக்கை இன்னும் அதிகரித்தது. என்னுடைய பொறுமையை கண்ட என் கூட்டத்தினர், எனக்கு ஆண்டவன் கொடுத்த அறிவை கண்டனர். உடலில் ஊனம் இருந்தாலும், இத்தனை அறிவை கொடுத்திருக்கிறானே என நினைத்த எங்கள் கூட்டத்தினர் என்னைத் தலைவராகத் தேர்ந் தெடுத்தனர்,'' என்றது வச்சலா.''உன்னை போல்தான் எல்லாரும் இருக்க வேண்டும்,'' என்று முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டியது மூத்த காகம்.***