பொன்நிற ஆம்பர்!
மஞ்சள் நிறத்தில், ஒளிமிக்க அழகுடன் காட்சிதரும், 'ஆம்பர்' உண்மையில் அரக்கு மரத்தின் பிசினால் உருவான தொல்பொருள் ஆகும். மரத்திலிருந்து உதிரும் பிசின், சிறு தாவரம், பூச்சிகளுடன் இணைந்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின், கல் போல் இறுகி கிடக்கும். கிட்டத்தட்ட, 12 கோடி ஆண்டுகள் பழமையான ஆம்பர் கூட கிடைத்துள்ளது. வியப்பு தரும் இந்த ஆம்பரை, ஐந்து வகையாக தரம்பிரித்துள்ளனர்.கடற்கரையில், கடலின் அடியில், பூமிக்குள் மற்றும் மலை இடுக்குகளில் என, எங்கு வேண்டுமானாலும் ஆம்பர் கிடைக்கலாம். உலகிலேயே வடக்கு ஐரோப்பாவில் உள்ள பால்டிக் கடற்கரையில் தான் அதிக அளவில் கிடைக்கிறது. விலை உயர்ந்த நகைகள், பதக்கங்கள், சென்ட், மருந்து தயாரிப்பு போன்றவற்றில் ஆம்பர் பயன்படுகிறது. ஆசிய நாடான சீனாவில் பாரம்பரிய மருத்துவத்தில், ஆம்பருக்கு தனி இடம் உண்டு. வைரத்தை தீட்டும் போது, வைர கல்லுக்கும், பிடிப்புக் குச்சிக்கும் இடையே, ஆம்பரை தடவி விட்டால், பிரிக்கவே முடியாதபடி ஒட்டிக் கொள்ளும்.பலவகை ஆம்பரை காட்சிக்கு வைத்துள்ள, அருங்காட்சியகம் ஒன்று ஆசியா, ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய ரஷ்ய நாட்டில் உள்ளது.