தங்க கல்லறை!
வடகிழக்கு ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடு எகிப்து. இங்கு பழங்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள், வாழும் போதே, பிரமிக்கத்தக்க வகையில் கல்லறை கட்டினர். அதற்கு ஏகப்பட்ட பொருட் செலவும் செய்தனர். பல்லாயிரம் தொழிலாளரின் கடும் உழைப்பில், அவை உருவாகியுள்ளன. இன்று, புராதன வரலாற்று சின்னங்களாக நிமிர்ந்து நிற்கின்றன. எகிப்தின் பழைய தலைநகர் தபோஸ் நகரம்; இது, உலகின் மிக நீண்ட நைல் நதிக்கரையோரம் உள்ளது. இங்கு திபான் மலைத்தொடர் பகுதியில் புராதன கல்லறைகள் உள்ளன. ஐரோப்பிய தொல்லியல் வல்லுனர்கள், 20ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் இவற்றை ஆராயத் துவங்கினர். பல முயற்சிகள், தோல்வியில் முடிந்தன. பிரமிடுகளை பற்றி சிந்தித்தாலே மரணம் நிச்சயம் என, மர்மக்கதைகள் உலா வரத்துவங்கின. அந்தப் பக்கம் போகவே பலர் அஞ்சி நடுங்கினர்.இந்த நிலையில், ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஹாவர்டு கார்ட்டர் துணிச்சலுடன் களம் இறங்கினார். அவரது முயற்சிக்கு, இங்கிலாந்தை சேர்ந்த கார்னாவன் நிதி உதவி செய்தார். முதல் உலகப்போர் ஏற்பட்டதால் பணியில் இடையூறு ஏற்பட்டது. மனந்தளராமல் தொடர்ந்தார் கார்ட்டர்.மணலால் மூடப்பட்டு இருந்த கல்லறையில், நுழைவாயில் போன்ற பகுதி தென்பட்டது. துவாரம் இட்டு நீண்ட கம்பியை செலுத்தினார். அது தடையின்றி பாய்ந்தது. புராதன நாகரிக உலகம் அங்கிருந்தது. அதில், எகிப்திய மன்னன் துட்டன் காமுன் உடல் வைக்கப்பட்டிருந்தது. உப்பால் பதப்படுத்தி, தைலங்கள் பூசி பாடம் செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட, 3,350 ஆண்டுகளுக்கு முன், அந்த உடல் பதப்படுத்தப்பட்டிருக்கலாம் என கணித்தார் கார்ட்டர். உடலை தாங்கிய, தங்க தகடு பதித்த பெட்டியும் இருந்தது. அதில், நவரத்தினங்கள், வைரமணி மாலைகள் மற்றும் பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்த, 5,000க்கும் மேற்பட்ட பொருட்கள் இருந்தன.மன்னனுக்கு சூடப் பட்டிருந்த மலர்மாலையும், வதங்கிய நிலையில் காணப்பட்டது. இது பெரும் ஆச்சரியம் தந்தது. கார்ட்டரின் கண்டுபிடிப்பின் துணை கொண்டு, சிற்பங்கள், இசைத்தொகுப்புகள், இலக்கியங்கள், திரைப்படங்கள் ஏராளமாக வெளிவந்தன. இவரது துணிச்சலான ஆய்வுக்கு பின்தான், எகிப்தில் உள்ள பிரமிடுகள் பற்றிய உண்மைகள் வெளிவந்தன. மானுட வளர்ச்சியின் மேன்மையை பகிர்ந்தன.மம்மி சாபம்!எகிப்திய மத நம்பிக்கைபடி, ஆராய்ச்சி என்ற பெயரில் கல்லறையைத் தோண்டுவது மிகப் பெரிய பாவமாக கருதப்பட்டது. கடவுள் தண்டிப்பார் என்றும் நம்பினர். தண்டனைக்கு வைத்திருந்த பெயர், மம்மி சாபம். மம்மி என்றால் பதப்படுத்திய உடல் என்று பொருள். சாபத்துக்கு பயந்ததால் ஆய்வுகளில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், தைரியமாக ஆய்வில் இறங்கி வெற்றி பெற்றார் கார்ட்டர். மம்மி சாபம் பற்றிய பயம் கலந்த சகாப்தம் முடிவுக்கு வந்தது.பின், இங்கிலாந்து திரும்பி, புராதன பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் கார்ட்டர். மேலும், 17 ஆண்டுகள் அதவாது, 65 வயது வரை வாழ்ந்தார். 'லிம்போமா' என்ற புற்றுநோயால், 1939ல் இறந்தார். தொல்லியல் வரலாற்றில் அவர் புகழ் நிலைத்து நிற்கிறது. எகிப்தியலின் துவக்கம்!எகிப்து நாகரிகம் பற்றிய அறிவுத் தேடல், 'எகிப்தியல்' என அழைக்கப்படுகிறது. இதைத் தொடங்கியவர், ஹாவர்டு கார்ட்டர். சிறு வயது முதலே, எகிப்துக்குப் போக வெறித்தனமாக ஆசை கொண்டிருந்தார்.அது, 17ம் வயதில் நிறைவேறியது. அங்கு பழங்கால நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கும் வேலையில் சேர்ந்தார். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் சுற்றுலாப் பயணியருடன் ஏற்பட்ட சிறு தகராறால் அந்த வேலை பறிபோனது. பின், ஓவியம் வரைதல், பழங்கால பொருள் விற்பனை என வயிற்றை நிறைத்தார். ஒரு கட்டத்தில், இங்கிலாந்தை சேர்ந்த கார்னர்வான் பிரபு அகழ்வாராய்ச்சிக்கு பண உதவி செய்ய முன்வந்தார். இதையடுத்து, 1909 முதல் அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஒன்றுமே கிடைக்கவில்லை. அயராமல் தொடர்ந்தார்.ஒரு நாள் கடைக்குப் போனார். வழியில், கானரி என்ற பறவை விற்பனை நடந்து கொண்டிருந்தது. அது, நம்ம ஊர் குயில் போல் பாடும். மஞ்சள் வண்ணம் கொண்டது. ஒன்றை வாங்கி திரும்பினார். அதன் குரல் இனிமை, ஜெயிக்கும் ஆர்வத்தை துாண்டியது!எகிப்து மன்னன் துட்டன் காமுன் கல்லறையை, நவம்பர் 4, 1922ல் கண்டறிந்தார். அந்த கணத்தை, 'படிக்கட்டில் இறங்கும்போது பயங்கர இருட்டு. மெழுகுவர்த்தி சுடர் காற்றில் ஆடியது. திடீரென, அறை எங்கும் வெளிச்சம் பரவியது. கொட்டிக் கிடந்த தங்கம் ஜொலித்தது...' என விவரித்தார்.அகழ்வாராய்ச்சியில் அந்த காலத்தில், இவரது கண்டுபிடிப்பை மிஞ்ச எவரும் இல்லை.