உள்ளூர் செய்திகள்

தங்கச் சிறகு!

ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் அரண்மனையை அடுத்துச் சோலை ஒன்று இருந்தது. அதன் நடுவில் பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியில் அன்னப் பறவைகள் பல வாழ்ந்து வந்தன. அவற்றிற்குப் பொன்நிறமான சிறகுகள் இருந்தன. அவைகள், அரசனுக்கு ஆண்டு தோறும் தங்கச் சிறகு ஒன்றை அன்பளிப்பாகத் தந்தன. அவற்றிற்கு எந்தத் துன்பமும் ஏற்படாமல் பாதுகாத்து வந்தான் அரசன்.ஒருநாள்-முழுமையும் பொன்னிறமான பறவை ஒன்று அந்த ஏரிக்கு வந்தது. அதன் அழகைப் பார்த்து அன்னப் பறவைகள் பொறாமை கொண்டன.''நண்பர்களே! இந்த ஏரியில் சிறிது காலம் தங்க விரும்புகிறேன். என்னை அனுமதியுங்கள்,'' என்று வேண்டியது அந்த பறவை.''இங்கே யாரையும் அனுமதிக்க மாட்டோம். இங்கிருந்து சென்றுவிடு. இல்லையேல், உன்னை விரட்டி அடிப்போம்,'' என்று அன்னப் பறவைகள் மிரட்டின.அந்தப் பொன்னிறப் பறவை அரசனிடம் சென்றது.''அரசே! நீங்கள் எனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என்று வேண்டியது.''அழகிய பறவையே! உனக்கு என்ன குறை? சொல், உடனே தீர்த்து வைக்கிறேன்,'' என்றான்.நடந்ததை எல்லாம் சொன்னது.''நீ எங்கு வேண்டுமானாலும் சென்று முறையிடு. எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அன்னப் பறவைகள் என்னை விரட்டி விட்டன,'' என்றது.கோபம் கொண்ட அரசன் வீரர்களை அழைத்தான்.''நம் பாதுகாப்பில் உள்ள அன்னப் பறவைகளுக்கு இவ்வளவு ஆணவமா? நீங்கள் ஏரிக்குச் சென்று அவற்றைக் கொன்று விட்டு வாருங்கள்,'' என்று கட்டளை இட்டான்.வில் அம்புகளுடன் அந்த வீரர்கள் ஏரியை நோக்கிச் சென்றனர்.அவர்கள் வருவதைப் பார்த்தது ஒரு பறவை.''நம்மைக் கொல்ல வீரர்கள் வருகின்றனர். இனி இங்கே இருந்தால் ஆபத்து. எங்காவது பறந்து செல்ல வேண்டும்,'' என்றது.எல்லாப் பறவைகளும் அங்கிருந்து பறந்து சென்றன. தங்குவதற்கு நல்ல இடம் கிடைக்காமல் அவை தவித்தன.''நாம் அந்தப் பொன்னிறப் பறவைக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும். பெருந்தன்மை இல்லாததால் வளமான இடத்தை விட்டு விட்டு, இப்படித் துன்பப்படுகிறோம்,'' என்றது ஒரு பறவை.மற்ற பறவைகளும், ''ஆமாம்! நாம் பெரிய தவறு செய்து விட்டோம்... வாழ்க்கையில் அட்ஜெஸ்ட் மென்ட் எப்போதும் தேவை,'' என்று கூறி வருந்தின.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !