உள்ளூர் செய்திகள்

நல்ல மனம்!

சல்லுவான்குப்பம் குளத்தில் வெள்ளி நிற மீன்களும், சில தங்க நிற மீன்களும் இருந்தன. நாள் முழுதும் நீந்தி, நீரில் துள்ளி குதித்து விளையாடி மகிழ்ந்திருந்தன. ஒரு நாள், அந்த குளத்திற்கு வந்தது ஒரு ஆமை. கோடை வெயில் சுட்டெரித்ததால், நீரில் நீந்தி விளையாடியது. இதை கண்டதும், 'நீ யார்... எதற்காக இங்கு வந்தாய்...' என்றன மீன்கள்.'வெகுதுாரத்திலிருந்து வருகிறேன். வெயில் கொளுத்துவதால், குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இந்த குளத்தில் நீரை பார்த்ததும் இறங்கினேன்; உங்கள் நண்பனாக ஏற்று, இங்கு வசிக்க அனுமதி தருவீர்களா...' என்றது ஆமை.அழுக்கு நிறத்திலிருந்ததால் மீன்களுக்கு அதை பிடிக்கவில்லை. அழகான தோற்றத்தில் இருப்பதாக கர்வம் கொண்டிருந்த மீன்கள், 'வேண்டவே வேண்டாம்... இந்த குளத்தில் அன்னியருக்கு இடமில்லை; உனக்குதான், நீரிலும், நிலத்திலும் வசிக்கும் ஆற்றல் உண்டு அல்லவா; உடனே வெளியேறு; இல்லையென்றால் கடித்து குதறிவிடுவோம்...' என்றன.அவற்றின் கோபத்தைக் கண்டு, வேறு வழி தெரியாமல் குளத்தைவிட்டு வெளியேறி, அருகிலிருந்த மரத்தடிக்கு வந்தது ஆமை. அதிக வெப்பம் இன்மையால், அந்த இடத்திலேயே தங்க முடிவு செய்தது.சில நாட்களுக்குப் பின் - குளத்துக்கு சிறுவர்கள் சிலர் வந்தனர். அங்கு கண்ணாடி போல் இருந்த நீரில் நீந்திய மீன்களை பார்த்து விட்டனர். அவற்றை பிடிக்க ஓசையின்றி குளத்தில் இறங்கினர்.சிறுவர்களை பார்த்த மீன்கள், செய்வதறியாது நடுங்கின. விஷயத்தைப் புரிந்து கொண்டது ஆமை. மரத்தடியிலிருந்து நகர்ந்து குளத்தில் இறங்கியது. வேகமாக நீந்தி நீரின் அடிப்பகுதிக்கு சென்றது. அங்கிருந்த சேற்றை கண்டபடி கலக்கி விட்டது. குளத்து நீர் சேறும் சகதியுமாகி கலங்கலாக காட்சியளித்தது. சிறுவர்களால் மீன்களை கண்டுபிடிக்க முடியவில்லை; அங்குமிங்கும் தேடி கொண்டிருந்தனர்.அப்போது, 'நண்பர்களே... குளத்தின் அடியில் சேற்றுக்குள் பதுங்கி கொள்ளுங்கள்...' என எச்சரித்தது ஆமை.அதன்படி செய்தன மீன்கள். சிறிதுநேரம் தேடிய சிறுவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சேற்றுக்குள்ளிருந்து வெளியே வந்த மீன்கள், 'தோற்றத்தைப் பார்த்து வெறுத்தோம்; இப்போது உன் நல்ல மனதை புரிந்து கொண்டோம்; இனி இந்த குளத்திலேயே வசிக்கலாம்... என்றன.செல்லங்களே... நல்ல குணமே நமக்கு தேவை; அதை புரிந்து நட்பு கொள்வோம்!கீர்த்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !