நற்குணம்!
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1980ல், 12ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...வகுப்பு ஆசிரியராக இருந்த பாலகிருஷ்ணன், தமிழ் பாடமும் நடத்துவார். செய்யுள் பகுதிகளை ராகமாக பாடி, பசுமரத்தாணி போல மனதில் பதிய வைப்பார். தினமும், ஒரு மாணவருடன், மதிய உணவை பகிர்ந்து உண்பார். பள்ளி வளாகத்தில், மரங்கள் நட்டு வளர்த்து வந்தார்.இரவில், லாந்தர் விளக்குடன், வீடு வீடாக வலம் வந்து, மாணவர்கள் படிப்பதை கண்காணித்து அறிவுரை கூறுவார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக தனி பயிற்சி வகுப்பும் நடத்தி வந்தார். பள்ளி படிப்பை முடித்த பின், வேலைக்கு செல்ல தக்கவாறு அறிவுரை சொன்னார். அவரது வழிகாட்டுதலால், மத்திய அரசின் துார்தர்ஷன் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, திறம்பட பணியாற்றி ஓய்வு பெற்றேன்.எனக்கு, 60 வயதாகிறது; அந்த ஆசிரியர், 2001ல் மரணமடைந்த போது, இறுதி சடங்கில் அந்த ஊரே திரண்டு பங்கேற்றது. அனைவரும், அவரது நற்செயல்கள் குறித்து நெகிழ்வுடன் பேசியதை கேட்டேன். நற்குணங்கள் நிறைந்தவரிடம் கல்வி பயின்றதை வாழ்வின் பெரும்பேறாக கருதுகிறேன்.- பி.சாந்தி கிருபாகரன், சென்னை.தொடர்புக்கு: 98842 37061