ஹெல்ப் பண்ணுப்பா!
வியாபாரி ஒருவர் தனது கழுதையையும், நாயையும் அழைத்துக் கொண்டு பயணம் சென்றார். கழுதையின் முதுகில் நிறைய மூட்டை ஏற்றப்பட்டிருந்தது. வியாபாரியும், நாயும் கழுதையின் பின்னால் நடந்து சென்றனர்.பயணத்தின் நடுவில், ஓர் அழகான புல்வெளி தென்பட்டது. உடனே, வியாபாரி தனது கழுதையை அப்புல்வெளியில் மேயவிட்டார். தானும் அருகிலிருந்த மரத்தடியில் படுத்து உறங்கினார்.கழுதை அங்கிருந்த புற்களை நன்றாக மேய்ந்தது. ஆனால், நாய்க்கு தின்பதற்கு எதுவும் இல்லை. நாய்க்கு பசி வயிற்றைக் கிள்ளியது.அது கழுதையைப் பார்த்து, ''நண்பனே! எனக்கு மிகவும் பசிக்கிறது. எஜமானரோ நன்றாக உறங்குகிறார். நீ கொஞ்சம் சாய்ந்து படுத்துக் கொள். உன் மீதுள்ள உணவு மூட்டையிலிருந்து சிறிதளவு உணவை நான் எடுத்துக் கொள்கிறேன்!'' என்று கெஞ்சிக் கேட்டது.கழுதையோ நாயின் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தான் மட்டும் நன்றாக புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. காரணம், தான் மட்டும் மூட்டை முடிச்சு சுமைகளை தூக்கிக் கொண்டு நடக்க, நாய் மட்டும் எஜமானுடன் ஜாலியாக நடந்து வருவதை கண்டது.நாயும், விடாமல் கழுதையிடம் கெஞ்சி கொண்டே இருந்தது.''எஜமானர் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவர் விழித்தெழுந்து உண்ணும்போது, உனக்கும் உணவு தருவார் அல்லவா? அதுவரை நீயேன் பொறுத்துக் கொள்ள மறுக்கிறாய்?'' என்று கோபமாய்க் கேட்டுவிட்டு, புற்களை மேய ஆரம்பித்தது கழுதை. நாயும் வேறுவழியில்லாமல், சோர்ந்து படுத்துக் கொண்டது.சற்று நேரத்தில் அங்கு ஓநாய் ஒன்று வந்து மேய்ந்து கொண்டிருந்த கழுதையின் மீது பாய்ந்தது.உடனே கழுதை நாயைப் பார்த்து, ''நண்பா! சீக்கிரம் ஓடிவந்து என்னைக் காப்பாற்று!'' என்று கதறியது.படுத்திருந்த நாயோ கொஞ்சமும் பதற்றமின்றி, ''ஏன் அவசரப்படுகிறாய் நண்பா? கொஞ்சம் பொறுமையாக இரு... உறங்கும் நம் எஜமானர் எழுந்திருக்கட்டும். அவர் நிச்சயம் உனக்கு உதவி செய்வார்,'' என்று சொன்னது.ஓநாயிடம் மாட்டிக்கொண்ட கழுதை படாதபாடுபட்டது. எனவேதான், நமக்கு உதவி செய்யக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும், நாம் பிறருக்கு உதவி செய்யாமல் இருக்கக்கூடாது. நாய்க்கு ஏற்ற நேரத்தில் உதவி செய்யாததால், கழுதை பட்ட பாடை பார்த்தீர்களா? எனவேதான் உங்களிடம் உதவி என கேட்பவர் களுக்கு, உதவி செய்யுங்க செல்லூஸ்!***