உலகில் வீர விளையாட்டுகள்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, இளவட்டக் கல் துாக்குதல் போன்று, உலக நாடுகளில் பாரம்பரிய விளையாட்டுகள் பல நடந்து வருகின்றன. அது பற்றி பார்ப்போம்... * பசுவில் பால் கறக்கும் போட்டி, அமெரிக்காவில் பிரபலமாக உள்ளது. விவசாயம், பால் பொருள் உற்பத்தி தொழிலை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புறங்களில் ஆண்டு தோறும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள், பசுவில் அதிக பால் கறப்பது தான் போட்டியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது * வட ஐரோப்பிய நாடான பின்லாந்தில் மனைவியைத் துாக்கியபடி ஆண்கள் தடைகளை தாண்டி ஓடும் போட்டி பிரபலம். தம்பதி ஒருங்கிணைப்பும், ஆண்களின் வலிமையும் வெற்றியை நிர்ணயிக்கும். உலக அளவில் பிரபலமான இவ்விளையாட்டு, கணவன் - மனைவி உறவை வலுப்படுத்தும் தனித்துவமாக உள்ளது * கிழக்காசிய நாடான தென் கொரிய கிராமங்களில், குதிரைகளை அடக்கி கயிறு கட்டும் போட்டி பிரபலம். திமிறி ஓடும் குதிரையின் வேகத்தை கட்டுப்படுத்தி, அடக்கி, கயிறு கட்டி நிறுத்தினால் வெற்றிக்கு வாய்ப்பு உண்டு * ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர் மத்தியில், பூமராங்க் எறிந்து திரும்ப பிடிக்கும் போட்டி கோலாகலமாக நடக்கிறது. இதில் வெற்றி பெற காற்றின் திசையை துல்லியமாக கணிக்கும் திறன் முக்கியம் * ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஆண்டு தோறும் நடக்கும் எருது விழா பிரபலம். இது ஜல்லிக்கட்டு போன்றது. அங்குள்ள பம்ப்லோனா நகரில், சான் பெர்மின் திருவிழா, உலக அளவில் சுற்றுலா பயணியரை ஈர்த்துள்ளது. அவிழ்த்துவிடப்படும் எருதுகளுடன் கலந்து சாமர்த்தியமாக ஓடி வீரர்கள் வெற்றி பெற வேண்டும் என்பது விதியாக உள்ளது. - நிகி