நேர்மையானவன்!
அரசம்பட்டி என்னும் கிராமத்தில், நல்லதம்பி அண்ணாச்சி மளிகை கடைக்கும், மாணிக்கம் அண்ணாச்சி மளிகை கடைக்கும் ஏக போட்டி. இரு கடைகளும் சக்கை போடு போட்டன; இருப்பினும், யார், 'நம்பர் ஒன்' என்பதை நிரூபிப்பதில், கடும் போட்டி நிலவியது.ஒரு நாள்-இளைஞன் ஒருவன் மாணிக்கத்தை தேடி வந்தான்.''என்ன விஷயம்...'' என்று கேட்டார்.''ஐயா... என் பெயர் வருண்; நான், நல்லதம்பி அண்ணாச்சி கடையில், வேலை பார்த்து கொண்டிருந்தேன். அவர் கொடுத்த சம்பளம் மிக குறைவாக இருந்ததால், வேலையிலிருந்து நின்று விட்டேன்; உங்களிடம் வேலை பார்க்க விரும்புகிறேன்,” என்றான்.'ஆஹா... தன் போட்டியாளரிடம் வேலை செய்தவன்' என்ற சந்தோஷத்துடன், ''நல்லதம்பியின் வியாபார ரகசியங்களை, எனக்கு கூறுவாயா...'' என்று கேட்டார் மாணிக்கம்.''மன்னித்து விடுங்கள் ஐயா, அவற்றை உங்களிடம் கூற இயலாது; ஏனெனில், அவற்றை தங்களிடம் கூறினால், பின், என்னை, உங்களிடம் வேலைக்கு சேர்த்து கொள்ள மாட்டீர்கள்...'' என்றான் வருண்.''ஏன் அப்படி சந்தேகப்படுகிறாய்...'' என்று கேட்டார். ''இத்தனை நாள் வேலை பார்த்த இடத்திற்கே துரோகம் செய்பவன், என் வியாபார ரகசியங்களை அவருக்கு சொல்ல மாட்டாய் என்பது என்ன நிச்சயம் என்று நீங்கள் அடுத்ததாக கேள்வி கேட்பீர்கள்; அதனால் தான்...'' என்றான்.''தம்பி... நீ கெட்டிக்காரன் மட்டுமல்ல, மிகவும் நாணயமானவன் என்று தோன்றுகிறது; எங்களுக்குள் வியாபாரத்தில் போட்டி உள்ளது உண்மையே. ஆனால், அதற்காக நேர்மையற்ற வழிகளில், உன்னை ஈடுபடுத்த மாட்டேன்; நீ இன்றே வேலையில் சேரலாம்...'' என்று, வேலையில் சேர்த்து கொண்டார் மாணிக்கம்.குட்டீஸ்... எப்பவும் நேர்மையா நடந்துக்கோங்க; அது தான் உங்களுக்கு நன்மையை தரும்.