பகையான பாசக்கயிறு!
கடலுார் மாவட்டம், சோழதரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1977ல், 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடந்த நிகழ்வு!அழகிய, 'ஜாமன்ட்ரி பாக்ஸ்' ஒன்றை எடுத்து வந்திருந்தாள் உடன் படித்த ரேகா. அது மிகவும் கவர்ந்தது. அனைவரும் உடற்பயிற்சிக்கு சென்றபின், அதை எடுத்து வைத்திருந்தேன்; திரும்பி வந்து தேடியவள் வகுப்பு ஆசிரியரிடம் புகார் கூறினாள். என்னை திட்டி, புத்திமதி கூறினார் ஆசிரியர். அதை அவமானமாக உணர்ந்தேன். சரியாக படிக்காததால் ஆசிரியர் திட்டியதாக, அப்பாவிடம் பொய் சொன்னேன்.ஒரே மகள் என்பதால், 'விருப்பம் இல்லை எனில், பள்ளிக்கு போக வேண்டாம்...' என்றார். அறியா பருவத்தில் சிந்திக்க திறனின்றி, பள்ளிப் படிப்பை, அத்துடன் நிறுத்தினேன். அப்பாவின் பாச மிக்க கயிறு, என் அறிவை தடுக்கும் பகைக் கயிறானது. இப்போது என் வயது, 52; உடன் படித்த அனைவரும், நல்ல நிலையில் இருக்கின்றனர். அறியாத வயதில், தவறாக முடிவு எடுத்ததை எண்ணி வருந்திக் கொண்டிருக்கிறேன்.- அ.மணிமேகலை, சென்னை.