உள்ளூர் செய்திகள்

நானே வென்றேன்!

நான் ஒரு மாற்றுத்திறனாளி. இளம்பிள்ளை வாதத்தால், ஒரு கால் செயலிழந்து கால் ஊனமானாலும், என் மனம் ஊனமாகவில்லை. திருச்சியில் உள்ள, ஒரு பள்ளியில் படித்தேன். படிக்கிற காலத்தில், எத்தனையோ சுவையான அனுபவங்கள்.விளையாட்டு வகுப்பில், என் தோழியர் அனைவரும், ஒவ்வொரு விளையாட்டிலும், பங்கு பெற்று, ஓடி ஆடுவர். ஆனால் நானோ, அப்படி துள்ளி, ஓடி விளையாட முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடும், ஏக்கத்தோடும் அவர்களை பார்த்து கொண்டிருப்பேன்.ஆண்டு விழாவின் போது, என் தோழியர், ஒவ்வொரு விளையாட்டிற்கும் பரிசும், சான்றிதழும் வாங்கும் போது, கண்கள் கசியும். இதை கவனித்த பி.டி., ஆசிரியை, தலைமை ஆசிரியையிடம், என்னை போன்ற சில மாணவியருக்காக, 'இன்டோர்' விளையாட்டு போட்டிகளை நடத்தலாம் என்று யோசனை கூறி, கேரம், செஸ், ஓவியப்போட்டி மற்றும் உட்கார்ந்து கொண்டே ஆடும் விதமாக டேபிள் டென்னிஸ் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்.இதனால், மகிழ்ச்சி அடைந்த, என்னை போன்ற மாணவியர், ஆர்வத்துடன் பங்கு பெற்றோம். கேரம், செஸ் போன்ற விளையாட்டில், மாவட்ட அளவில் பங்கு பெற்றோம்.எங்களின் தலைமை ஆசிரியையும், விளையாட்டு பிரிவு ஆசிரியையும், எங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தந்தனர்.ஒருசமயம், செஸ் விளையாட்டில் சாம்பியனாக திகழ்ந்த ஆசிரியையுடன், மோதும் வாய்ப்பு கிடைத்தது. நானும் திறமையாக ஆடினேன். ஆசிரியையும் திறமையாக ஆடினார். இறுதியில் நானே வெற்றி பெற்றேன். பரிசு வாங்கிய பின் தான் தெரிந்தது, ஆசிரியை, நான் ஏமாற்றம் அடைந்துவிட கூடாது என்று, தன் திறமையை மறைத்து ஆடி, என்னை வெற்றி பெற செய்தது. கண்ணீர் மல்க நன்றி கூறினேன்.என்னை போன்ற மாற்று திறனாளிகள் மேல் பேரன்பு கொண்டு, தாயுள்ளத்தோடு, தியாக உள்ளத்தோடு, பணியாற்றிய ஆசிரிய பெருமக்களை நினைக்கும் போது, நெஞ்சமெல்லாம் மகிழ்ந்து, உவகை ஊற்றெடுக்கிறது.- ஏ.சித்திகா, திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !