உள்ளூர் செய்திகள்

இமை திறந்தால்!

வாத்துக் கூட்டம் அழகிய குஞ்சுகளுடன் துறுதுறுப்பாக திரிந்தது. ஒரு குஞ்சு மட்டும் வித்தியாசமாக இருந்தது. அதற்கு மெல்லிய உடல் வாகு. அடர்த்தியற்ற குச்சியான முடி, வித்தியாசமான குரல் என, வேறுபட்டிருந்தது.மற்ற வாத்து குஞ்சுகள் இதை விரும்பவில்லை. சீண்டியும், கிண்டல் செய்தும் ஒதுக்கிவந்தன. அளவில்லா வருத்தத்துடன், 'என் உடன் பிறந்தவர்களே வெறுக்கும் வகையில் பிறந்துவிட்டேனே...' என கதறியது.வாத்து குஞ்சுகள் அழகால் கவர்ந்தன; அழகற்ற குஞ்சோ, முன்னை விட அசிங்கமாகியது. தாயை நெருங்கினால், பிற குஞ்சுகள் கொத்தி காயப்படுத்தின. நாட்கள் நகர்ந்தன. அசிங்க குஞ்சின் உடலில் துாய வெண்ணிற இறகுகள் முளைக்க ஆரம்பித்தன. அதன் வண்ணம் மிகவும் பிரகாசித்தது. நீண்ட குச்சி முடி, அழகிய கொண்டையாகி ஜொலித்தது; இறக்கைகள் கண்ணைக்கவர்நதன. அது கண்கொள்ளா அழகுடன் மிளிர்வதைக் கண்ட, மற்ற வாத்துகள் வெட்கமடைந்தன. அதை நெருங்கவே கூச்சப்பட்டன.என்ன நடந்தது தெரியுமா... அன்னப்பறவை ஒன்று இட்ட முட்டை, வாத்து மூட்டையுடன் இருந்தது. அது பொரித்து அந்த குஞ்சு வந்திருந்தது. ஆரம்பத்தில் அழகற்றதாக தெரிந்தாலும், நாளடைவில் அதன் இறக்கை வளர்ந்து அழகாகியது. படபடவென சிறகடித்த அழகிய அன்னம் எழுந்து பறந்தது. துாற்றிய வாத்து குஞ்சுகள், வெட்கத்துடன் அண்ணாந்து பார்த்து நின்றன.பட்டு குட்டீஸ்... சிக்கல்களை எதிர்கொள்ளும் போது தான், திறமை வெளிப்படும் என உணருங்கள். மல்லிகா குரு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !