உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்... (114)

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, 29 வயது, சிறுவர்மலர் வாசகி எழுதுவது... ஒவ்வொரு பாதத்திலும், பத்து ஆணி இருக்கு ஆன்டி; வலிக்குது. மூன்று வருஷமா சித்த மருந்து, போடுறேன். சின்ன ஆணி எல்லாம் கொட்டி போச்சு; பெரிசா இருக்கிற ஆணிகள் கொட்டல; இதற்கு மருந்து வெச்சு, கட்டி முடிச்சு, இரவில், துாங்கவே, ஒரு மணி ஆகுது. சில நாட்களில், அழுது அழுது எப்ப துாங்குவேன்னு தெரியாது. சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்றேன்; ரொம்ப நேரம் நிக்கிறதால, கால் ஆணி அதிகமாவுதான்னு தெரியல.திருமணம் நடக்கப் போகுது ஆன்டி... மாப்பிள்ளை வீட்டுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா, திருமணம் நின்னு போயிடுமோன்னு பயமா இருக்கு. இந்த கால்ஆணி குணமாக, ஏதாவது வழியை சொல்லுங்க ஆன்டி...மகளே கவலைப்படாதே! திருமணம் ஆவதற்குள், இந்த பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சிடலாம். இந்த கால்ஆணி ஏன் வருதுன்னு தெரிஞ்சிக்கோ... சுத்தம் மிக மிக அவசியம்; கால்களையும், அணியும் செருப்பையும், ரொம்ப சுத்தமா வச்சிக்கணும். டைட்டான செருப்பு அணிந்து, ரொம்ப தூரம், நடப்பதும், ரொம்ப நேரம் நிற்பதும் ஆணி வருவதற்கு ஒரு காரணம். காலில் ஏற்படும் அலர்ஜி, அதிக சூடு, அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகள் கால்களை தாக்குதல், ஏதேனும், ஒரு பொருள் குத்தி, அதை எடுக்காமல் விட்டால், அந்த இடத்தில், தோல் தடிமனாகி, ஆணியாக மாறும்; சரி... இதற்கு என்ன செய்யலாம்ன்னு சொல்றேன்... * லுாசான செருப்பு அணிவது நல்லது* கால்களை சுத்தமாக பராமரித்தல்; வாரத்திற்கு ஒரு முறை, செருப்பை கழுவி, வெயிலில் காய வைக்க வேண்டும்* ஆணி உள்ள இடங்களில், தினமும் இரவில் தூங்கும் போது, விளக்கெண்ணெய் தடவி, 'மசாஜ்' செய்யவும்* அதிமதுரம் ஒரு தேக்கரண்டி, கடுகு எண்ணெய் ஒரு தேக்கரண்டி கலந்து, பேஸ்ட் ஆக்கி, கால் ஆணி மீது தடவி, துணியால் காலை கட்டி விட்டு தூங்கு; ஒரு மாதத்தில், நல்ல பலன் கிடைக்கும்* இரவில் படுக்கும் போது, பூண்டை நசுக்கி, துணியால் கட்டி வந்தாலும், ஆணி போகும்* இஞ்சி சாறில், நீர்த்த சுண்ணாம்பை சேர்த்து, குழைத்து, பத்தையாக போட்டு வருவதும், நல்ல பலன் தரும்* எட்டு மணி நேரம் நின்றபடியே செய்யும் வேலையும், இந்த ஆணிகளுக்கு ஒரு காரணம். உனக்குத் தான் திருமணம் ஆகப்போகுதே... எனவே, வேலையை விட்டு விட்டு வீட்டிலிருந்து பாதங்களுக்கு ஓய்வு கொடு; உடம்பை நன்கு கவனித்துக் கொள்; எல்லாம் சரியாகி விடும்.இது விஷயமாக, மாப்பிள்ளையிடம் சொல்லி கண்ணை கசக்காதே... இதை சரியாக்கும் முயற்சியில், நம்பிக்கையுடன் ஈடுபடு. சந்தோஷமா இரு. சிறுவர்மலர் இதழின் சார்பாக திருமண வாழ்த்துகள்!மகிழ்ச்சியுடன், ஜெனிபர் பிரேம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !