இளஸ்... மனஸ்... (140)
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, கல்லூரி மாணவியர் எழுதிக் கொண்டது. நாங்கள், நால்வரும் நெருங்கிய தோழிகள். என்னிடம் இருந்து, சிறுவர்மலர் படிக்க ஆரம்பித்து, இன்று, யார் முதலில் படிப்பது என்பதில், செம போட்டி நடக்குது ஆன்டி. இந்த வாரம், எந்த பிரச்னைக்கு, பதில் சொல்லியிருப்பீங்க என்று, அறிவதில், மிகவும் ஆவலாக இருப்போம்.சரி... பிரச்னைக்கு வர்றேன்!நான், மாநிறமாக இருப்பேன்... வெள்ளைத் தோல் அழகிகளைக் கண்டால், எனக்கு பொறாமை வரும். எனவே, வெள்ளையாக, எளிமையான வழிகளைச் சொல்லுங்க ப்ளீஸ்...என்னோட, இன்னொரு தோழிக்கு, வறண்ட சருமம்; அவளுக்கு, 'பள... பள...' முகம் கொண்ட, இளம் பெண்களைக் கண்டால், பத்திகிட்டு வரும். அவளோட தோலும், கண்ணாடி மாதிரி, 'பள... பள...'க்கணுமாம். அதற்கும், வழி சொல்லுங்க... குண்டூஸ்களுக்கு, எளிய வழிகள் சொன்னது போல், எங்களுக்கும் சொல்லுங்க... எங்களது அழகே, உங்க கையில தான் இருக்கு ஆன்டி...ஹா... ஹா... அப்ப்ப்ப்ப்பா... எவ்வளவு பயங்கரமான பிரச்னை இது... முதலில், உங்க ரெண்டு பேரையும் அழகியாக்கிட்டு தான், மறு வேலையே செய்யப் போறேன். சரியா!இன்றைய, பெரும்பாலான பெண்களின் ஆசையே, வெள்ளையாகணும் என்பது தான். ஒவ்வொரு நிறத்திலும், ஒரு அழகு உண்டு என்பதை, ஏன், இந்த பெண்கள் மறந்துடறாங்க.... ஒருவருடைய உடம்பின் நிறத்தை, முற்றிலுமாக மாற்ற முடியாது. செயற்கை முறையில் மாற்றலாம்; அதில், பக்க விளைவுகள் நிறைய ஏற்படும். ஒவ்வொரு நாட்டின், தட்பவெட்ப நிலைக்கேற்ப, அவர்களது நிறம் மாறுகிறது.குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்கள், வெள்ளை நிறத்தில் இருப்பர்; கடுமையான வெப்ப பிரதேசமாகிய, ஆப்பிரிக்க நாடுகளில், கருமை நிறத்திலும், நம்மை போன்ற, மிதமான வெப்ப நிலை உள்ள இடத்தில், மாநிறமாக அல்லது சற்று சிவப்பு நிறத்தில் இருப்பர்.தினமும், சத்துள்ள காய், கனிகள், சாப்பிட்டு, 8 மணி நேரம் துாங்கி எழுந்து, உடலை, ஆரோக்கியமாக வைத்துக் கொண்டாலே போதும், உடல், பொலிவுடன் திகழும். தினமும், பச்சையாக, ஒரு கேரட் சாப்பிட்டு வர, சிவப்பழகு கிடைக்கும். கேரட்டை அரைத்து, சிறிது தயிர் கலந்து பூசி வர, கருமை நிறம் மறைந்து, வெண்மையாகும்.தக்காளியை, இரண்டாக வெட்டி, அதில், சிறிது சர்க்கரையை தேய்த்து, முகம் மற்றும் உடம்பில், கருப்பாக உள்ள இடங்களில் தேய்த்து, 10 நிமிடத்திற்குப் பின் குளித்து வர, கருமை நிறம் மாறி, வெண்மையாகும்.அடுத்து, நம்முடைய சருமம் பொலிவு பெற வேண்டுமானாலும் சத்துள்ள உணவை உண்ண வேண்டும்.வைட்டமின் - ஏ சத்து குறைந்து போனால், தோல் வறண்டு, போகும். அதற்கு, கீரை, முட்டைகோஸ், பட்டாணி, வெண்ணெய், முட்டையின் மஞ்சக்கரு இவற்றை, தினமும் சாப்பிட்டு வந்தால், வைட்டமின் - ஏ கிடைக்கும்.பால் ஏடு எடுத்து, அதில், ஒரு தேக்கரண்டி கடலை மாவு கலந்து, முகத்தில் பூசி, 10 நிமிடத்திற்குப் பின், இளம் சூட்டு தண்ணீரில், முகம் கழுவவும். எலுமிச்சை சாறை, பாலேட்டுடன் கலந்து, முகத்தில் தேய்த்து, பின், கடலை மாவை முகத்தில் பூசி, கழுவி வர, வறண்ட சருமம் மாறி, முகம் பளபளக்கும்.தினமும், கொய்யா, திராட்சை, வாழை, வெள்ளரி, கேரட் என, ஏதாவது ஒன்றை சாப்பிட்டு வர, முகம் பளபளக்கும்.போதுமா... 'டிப்ஸ்' இவற்றை செய்து பார்த்துட்டு, கடிதம் எழுதுங்க. சரியா! அப்படியே, படிப்பிலும், கவனமாக இருங்க ஓ.கே.,- அன்புடன், ஜெனிபர் பிரேம்!