உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்... (184)

அன்புள்ள ஆன்டி...என் வயது, 17; பிரபல பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படிக்கும் மாணவி. எனக்கு ஒரு சந்தேகம்... * அசோகர் மரங்களை நட்டார்* கஜினி முகமது, 17 முறை இந்தியா மீது படையெடுத்தார்* காந்திஜி சத்தியாகிரக போராட்டங்கள் நடத்தி, இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்தார். இது போன்ற தகவல்கள் அடங்கிய சரித்திரத்தை படித்து என்ன பயன். நாம், பழம் பெருமை பேசி வீணாகிறோமா... சரித்திரம் ஒரு கட்டுக் கதை என எண்ணுகிறேன். இதை ஒரு குற்றச்சாட்டாகவே முன்வைக்கிறேன். வாழ்வில் சரித்திரத்தின் தேவைப் பற்றி, உங்கள் கருத்து என்ன என்று சொல்லுங்கள்.இப்படிக்கு,என்.சிந்துஜா.அன்பு மகளுக்கு... கடந்த கால நிகழ்ச்சிகளின் முழுமை தொகுதியே சரித்திரம். மனித சமுதாயத்தின் அரசியல், சமூகம், பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், மருத்துவம், பண்பாடு, அறிவு, ராணுவ முன்னேற்றங்களின் ஆவணமே சரித்திரம்.இது மக்களை, நாட்டை, காலத்தை, தனி மனிதனை சார்ந்தது.சரித்திரத்தின் பயன்பாடுகளை அறிந்து கொள்...* சரித்திரம் கற்பிக்கும் பாடங்களிலிருந்து, நாம் எப்படி வந்தோம் என தெரிந்து கொள்ளலாம்* தவறுகளை களைந்து, சமுதாயத்திற்கு புதிய பாதை வகுத்து கொடுக்க உதவுகிறது* உலக அளவில் சமூகங்கள் இடையே உறவை மேம்படுத்துகிறது* நம் பண்பாடு, கலாசாரத்தை பிற பண்பாடு கலாசாரங்களுடன் ஒப்பிட உதவுகிறது* சொந்த அடையாளத்தை கண்டுபிடிக்க உதவுகிறது* குடியுரிமை கட்டமைப்பை உன்னதமாக மேம்படுத்த பயன்படுகிறது* வாசிப்பையும், எழுத்தையும் ஊக்குவிக்கிறது* இன்றைய பிரச்னைகளுக்கான தீர்வு, சரித்திரத்தில் ஒளிந்திருக்கிறது* சரித்திரம் மாபெரும் கதை போன்றது* ஆவணமாக மட்டுமின்றி, சுவாரசியத்துக்கும் தெரிந்து கொள்ளலாம்* தார்மீக புரிதலை ஏற்படுத்தும்* மனித பரிணாம ஆதாரங்களையும், முறைகளையும், போக்குகளையும், வகைப்படுத்துகிறது. சரித்திர நிகழ்வுகளை வரிசைபடுத்த, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உதவுகின்றனர். பழைய பத்திரிகைகள், புகைப்படங்கள், ஒலி நாடாக்கள், தனி மனித டைரி பதிவுகள், இலக்கியங்கள், நாடகங்கள், ஆடைகள், நகைகள், நாணயங்கள், உணவுப்பொருள் மிச்சங்கள் வழியாக சரித்திரத்தை கட்டமைக்கலாம்.மூதாதையரின் நேர்மறை, எதிர்மறை ஆளுமையை தெரிந்து கொள்ள விரும்பாமல், சேணம் பூட்டிய குதிரையாய் வாழாதே மகளே... மூதாதையரின் எச்சில் தான், உன் வாழ்க்கை. சரித்திரத்தை படித்து, இளவரசி உடையில், குதிரையில் மானசீகமாக வலம் வா குந்தவையே!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !