இளஸ் மனஸ்...
ஜெனி ஆன்டி, நான் சிறுவர்மலர் இதழை வாரம் தவறாமல் படித்து விடுவேன். அதில் நீங்கள் கொடுக்கும், 'அட்வைஸ்' எனக்கு மிகவும் பிடிக்கும். அதுபோல் எனக்கு ஒரு வழி சொல்லுங்க ஜெனி ஆன்டி.என் பெயர் .... -------- நான் பி.இ., முதலாம் ஆண்டு கோ-.எட்., காலேஜ்; இந்த வருடம் ஹாஸ்டலில் சேர்ந்துள்ளேன். என் குடும்பத்தில் மொத்தம் 5 பேர். அப்பா, அம்மா, அக்கா, தம்பி, நான். அப்பாவிற்கு நன்கு படித்தால் மட்டுமே பிடிக்கும்; வீட்டில் வேலை செய்தால் மட்டும் என்னிடம் பேசுவார் அம்மா. ஆனால், என் அக்கா ஒரு வேலையும் செய்ய மாட்டாள்.அக்காவும், தம்பியும் என்னிடம் பாசமாக இருக்கவே மாட்டர். பெற்றோர் என்னிடம் பாசமாக இருப்பர்; ஆனால், அதை வெளியே காட்டுவது இல்லை. அந்த பாசம் எதற்கு? நான் பாசத்திற்காக மிகவும் ஏங்குகிறேன். எந்த பொருள் வாங்கினாலும், சாப்பிடுவது முதல், தலை வாரிக் கொள்வது வரை பெற்றோர் இஷ்டப்படித்தான் செய்ய வேண்டும். ஆனால், என் அக்கா, தம்பி இருவரும் எது கேட்டாலும் அவங்க இஷ்டப்படி வாங்கித் தர்றாங்க. இதனால் எனக்கு அக்கா, தம்பி மேல் வெறுப்பு அதிகமாகிறது. ஜெனி ஆன்டி, என் பெற்றோர் இப்போது கூட என்னை அடிப்பர். எனக்கு வீட்ல இருக்கவே பிடிக்கல; ஹாஸ்டலே பெட்டர். வீட்டில், 'டிவி', ரேடியோ என்று எந்த பொழுதுபோக்கும் கிடையாது. வாழவே பிடிக்கல ஆன்டி. எனக்கு ஏதாவது வழி சொல்லுங்க ப்ளீஸ்...ஹாய்டா... அன்புக்கு ஏங்கும் உனக்கு என்னோட செல்ல முத்தங்கள். இங்க பாரும்மா! உன் மீதுள்ள அன்பை உன் பெற்றோருக்கு வெளிப்படுத்த தெரியல... அவ்ளோதான். இல்லன்னா உன் அக்காவை போலவே உன்னையும் பி.இ., படிக்க வைக்க மாட்டார்களே... ஒரு வீட்டில் இரு பெண் பிள்ளைகளை, பி.இ., படிக்க வைப்பது என்பது அவ்ளோ சுலபமான காரியம் இல்ல தெரியுமா? இதை குறித்து நீ பெருமைப்படணும் செல்லம்.பொதுவாக, முதல் பெண் மற்றும் ஒரே ஆண் பிள்ளை என்ற முறையில் உன் அக்கா, தம்பி இருவரையும் மிகவும் செல்லம் கொடுக்கின்றனர். இது கட்டாயம் தவறுதான். ஆனால், செல்லம் கொடுத்து கெட்டுப் போய் வளர்வதை விட, கண்டித்து வளர்க்கப்படும் உன் வாழ்க்கை நிச்சயமாகவே எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும். உன் அக்காவிடம் வேலை சொல்லி கஷ்டப்படுவதை விட உன்கிட்ட சொன்னால், நீ எதிர்த்துப் பேசினாலும் செய்துவிடுவாய் என்ற நம்பிக்கையில்தான், உன் அம்மா உன்னிடம் சொல்கிறார் செல்லம். உன் டாடி, படிப்புக்கு முதலிடம் கொடுத்து, உங்களது எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, 'டிவி,' ரேடியோ எதையுமே அனுமதிக்கவில்லை.எப்பவுமே கஷ்டத்தில் வளர்கிற நீ, எதிர்காலத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பாய் மகளே... சின்ன வயதில் எல்லா சுதந்திரமும் கொடுத்து, 'மாடர்னாக' வளர்க்கப்படும் பிள்ளைகள் எல்லாருமே கெட்டு சீரழிந்து விடுகின்றனர். உனக்கு நல்ல படிப்பு கொடுத்த பெற்றோருக்கு நன்றி சொல்லு; அவர்களை வெறுக்காதே. சரியா? இனி இந்த அட்வைஸ் உன் பெற்றோருக்கு.மூன்று பிள்ளைகள் இருக்கும்போது மூன்று பேரிடமும் சமமான அன்பை காட்ட வேண்டும். நீங்கள் எந்த பிள்ளைகள் மீது உயிரை விட்டு வளர்க்கிறீர்களோ, அந்தப் பிள்ளைதான் நாளைக்கு உங்களை மிகவும் வேதனைப்படுத்தும், 'முள்ளாக' மாறிவிடும். எனவே, பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டாதீர்கள் பெற்றோர்களே...அதே சமயம், இந்த காலத்துப் பிள்ளைகள், 'டிவி', சீரியல், சினிமாவில் வரும் பெற்றோர் எதற்கெடுத்தாலும், 'ஐ லவ் யு செல்லம்... யு ஆர் சோ சுவீட்!' என்று கொஞ்சுவதை பார்த்து வளர்கின்றனர்.ஸோ, அவர்களிடம் நீங்களும் கொஞ்சமாவது உங்கள் அன்பை காட்ட வேண்டும். இப்படி உங்கள் பிள்ளைகளை பாசத்துக்காக ஏங்கவிட்டால், இந்த நேரத்தில் யாராவது ஒரு வாலிபன், உங்கள் மகளிடம் அன்பாக பேச ஆரம்பித்தாலே போதும். சுலபமாக அவன் வலையில் விழுந்து விடுவாள் உங்கள் மகள். இது இயற்கை!பெற்றோரிடம் வீட்டில் கிடைக்காத அன்பு, வெளியே கிடைக்கும் போது அந்த அன்பு எப்படிப் பட்டது என்று சீர்தூக்கி பார்க்கத் தெரியாது. 'ஓவர் ஸ்டிரிக்ட்'டா இருந்து வாழ்க்கையே வெறுத்து போகும் அளவிற்கு பெற்றோராகிய நாம் இருக்கக்கூடாது. அந்த 'பிஞ்சு' இதயங்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி, அன்பு செய்து அரவணைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்கள் செல்லங்களை நீங்களே இழந்து போக நேரிடும்!மிகுந்த துக்கத்துடன்,- ஜெனிபர் பிரேம்.