உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்...

சகோதரி ஜெனிபருக்கு, என் பெயர் ------..... எனக்கு மூன்று ஆண் குழந்தைகள். இரண்டாவது மகன் பெயர் அகிலேஷ். எங்களது சொல்பேச்சு கேட்கமாட்டான். அடிச்சாலும் அழாமல், 'உம்மு'ன்னு இருப்பான். ஆசிரியர் அடித்தாலும் எதுவும் பேசமாட்டான். இரண்டாவது ரேங்க் வாங்குவான். எனக்கு மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு, என்கிட்டே வருவதே இல்லை. என் மடியில் இருக்கும் குழந்தையைப் பார்த்ததில் இருந்துதான் அவன் இப்படி மாறிவிட்டான். 'குதிக்காதே... குழந்தை மீது விழுந்துடாதே... ' என்று சொன்னேன். அன்றிலிருந்து என்னுடன் பேசுவதில்லை; அவன் அப்பா கூடதான் படுத்துக்குவான். என்னையும், குழந்தையையும் அப்படி வெறுக்கிறான். சகோதரியே... ஒரு தாயின் உள்ளம் உங்களுக்குதான் புரியும் என்று நினைக்கிறேன்.என் மகன் என்னை வெறுப்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. என்ன செய்வது சகோதரி? என் பிள்ளை மீண்டும் என்னுடன் பாசமா பழகணும். அதுக்கு ஒரு வழி சொல்லுங்க...ஓ மை காட்! மொதல்ல கண்ண துடச்சிக்கோங்க சகோதரி... இது ஒரு பெரிய பிரச்னையே இல்லை... இன்றைக்கு அநேக தாய்மார்கள் சந்திக்கும் பிரச்னைதான் இது.இத்தனை வருடங்களாக அவனை மட்டுமே தூக்கி மடியில் வைத்து கொஞ்சிய அம்மாவின் மடியில், புதிதாக ஒரு குழந்தை இருந்தால் எல்லா குழந்தைகளுக்கும் ஏற்படும் பொறாமையின் வெளிப்பாடுதான் இது.நீங்கள் உங்களது இரண்டாவது மகனை தூக்கி மடியில் வைத்து நிறைய கொஞ்சனும்; பேசணும். அவனுக்கு முன்பாக குழந்தையை ரொம்ப கொஞ்சக் கூடாது. அத்துடன் அவனிடம், 'மகனே... உன் கூட சேர்ந்து விளையாட ஒரு குட்டி தம்பியை கடவுள் உனக்கு, 'கிப்ட்' ஆ கொடுத்திருக்கிறார். இவனுக்கு நீதான் அண்ணன். இவனை நீ பத்திரமாக பார்த்துக்கணும்; இவன் வளர்ந்ததும் உன்னை பார்த்துதான் எல்லாமே கத்துக்குவான். 'எங்கண்ணா... எங்கண்ணா'ன்னு சொல்லி உன் மேல உயிரையே விடுவான். இருந்தாலும் எனக்கு நீதான் ரொம்ப முக்கியம். காரணம், நீ நல்லா படிக்கிற... உன் மேலே தான், 'மம்மி'க்கு பாசம் அதிகம். அப்புறம்தான் இவர்கள் இருவரும் எனக்கு...' இப்படி எல்லாம் பேசி, அவன் மனதில் அவன்தான் ரொம்ப முக்கியம் என்பதை புரிய வையுங்கள்.அவனைக் கூப்பிட்டு, 'வாப்பா... தம்பிக்கு சாப்பிடத் தெரியாது... சாப்பாடு ஊட்டலாமா?' என்று சொல்லி அவனையும் உங்க கூடவே வச்சிட்டு செய்யுங்க. நாளடைவில் தம்பியை நேசிக்க ஆரம்பிப்பதுடன், அவனுக்கு உங்கள் மீது இருந்த வெறுப்பு, கோபம் போய், 'நம்ப மம்மிக்கு நாமதான் முக்கியம்?' என்ற எண்ணம் வரும். அதன்பிறகு சகஜமாகிடுவான். இதெல்லாம், 'பொஸசிவ்னஸ்'னால் வருவதுதான். இப்பவே நீங்கள் உங்கள் மகனை சரிபண்ணவில்லை என்றால் வளர வளர தம்பியையும், உங்களையும் வில்லனாவே பார்க்க ஆரம்பித்து விடுவான். ஸோ... கவலைப்படாதீங்க... உங்க இரண்டாவது மகனை நல்லா கொஞ்சுங்க... 'ப்ராப்ளம்' சரியாகிவிடும்.செல்ல கொஞ்சல்ஸ்சுடன்,- ஜெனிபர் பிரேம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !