இளஸ் மனஸ்!
அன்பு பிளாரன்ஸ்...பிளஸ் 2 படிக்கும் மாணவி நான்; வணிகம் செய்யும் சமூகத்தை சேர்ந்தவள் உடன் படிக்கிறாள். அவள் என் தோழி; மகா சிக்கனவாதி. ஆணோ, பெண்ணோ அந்த சமூகத்தில், குழந்தை பருவத்திலிருந்தே சிக்கனம் போதிக்கப்படுவதாக கூறுகிறாள். எப்போதும் சிக்கனமே சிறப்பான வாழ்க்கைக்கு வழி என, கண் சிமிட்டுகிறாள். உடன் படிக்கும் இன்னொரு தோழி, 'வாழ்க்கை வாழ்வதற்கே... ஆடம்பரமாக வாழ்வதில் தவறு ஏதுமில்லை; ஈயார் தேட்டை தீயார் கொள்வர்...' என்கிறாள். இக்காலத்தில், சிக்கனமாய் இருப்பதா... தாராளமாய் செலவு செய்வதா... எது சிறப்பானது. நல்ல அறிவுரை கூறுங்கள் ஆன்டி.அன்பு மகளுக்கு...சிக்கனத்துக்கும், கஞ்சத்தனக்கும் ஒரு நுாலிழை தான் இடைவெளி; நான்கு பேருள்ள குடும்பத்துக்கு, காலை உணவாக, 18 இட்லிகள் தயாரித்தால் போதுமானது. அந்த வேளையில், 25 இட்லிகளை தயாரிப்பது ஆடம்பரம்; 18 இட்லிகளுக்கு பதில், 15 என்றால் கஞ்சத்தனம்.சில சமூகங்களில், ஆடம்பரத்தை தவிர்க்க, பல பாடங்களை கற்றுத் தருகின்றனர். ஒழுக்கம் போதிக்கப் படுகிறது; செலவுக் கணக்கு பார்க்க கற்று தருகின்றனர்; எந்த பொருளையும் வீணாக்க மாட்டார்கள் அந்த குடும்பக் குழந்தைகள்.அவர்களுக்கு எளிமை முக்கியம்; கடன் வாங்கும் பழக்கம் அவர்களிடம் அறவே இருக்காது. அன்றாட வாழ்க்கையில், சிக்கனமாக செலவு செய்வர்; கோவில் கட்ட, குடி தண்ணீர் குளம் வெட்ட, மக்களுக்கு திருமணம் செய்ய பெரும் பணம் செலவு செய்வர்.மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது, குறைந்த பட்சம், 6 லட்சம், அதிக பட்சம், 60 லட்சம் பணத்தை அல்லது வைர நகையை சீதனமாய் கொடுப்பார் மணமகளின் தந்தை. திருமணச் செலவு போக, மீதி தொகையை வங்கியிலோ அல்லது அதிக வட்டி கிடைக்கும் நிறுவனத்திலோ, பெண் பெயரில் முதலீடு செய்வார்.மகளே... சிறுவாடு காசு என கேள்வி பட்டிருக்கிறாயா... குடும்பத்தில் கணவன், மகனுக்கு தெரியாமல், சிறிது சிறிதாய் பணத்தை ஒளித்து வைப்பர் பெண்கள். சிலர் மாதாந்திர சீட்டு கட்டுவர். சிறிது சிறிதாய் சேர்க்கும் பணம், ஒரு கட்டத்தில் பெரிய தொகை ஆகி விடும்; எதிர்பாரா குடும்ப செலவின் போது, சுயநலமின்றி அந்த பணத்தை கொடுத்து உதவுவர்.வியாபாரத்தில் நஷ்டமடைந்த கணவனுக்கு, மனைவியின் சிறுவாடு உதவும்; சிக்கன பழக்கத்தை குழந்தை பருவத்திலே கடைபிடித்தால் தான், திருமணத்துக்குப் பின் சிறுவாடு காசு சேமிக்கும் பழக்கம் வரும்.சிக்கனமும், சேமிப்பும் புதிய வருமானத்துக்கு சமம்; பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த, பொது போக்குவரத்தை பயன்படுத்துவது; வீட்டிலிருக்கும் குண்டு பல்புகளை கழற்றி, சி.எப்.எல்., அல்லது எல்.ஈ.டி., பல்புகள் மாட்டுவது, மின்சாரத்தை சிக்கனமாக்க உதவும்.தேவை இல்லாத போது, மின் விளக்குகளையும், மின் விசிறிகளையும் நிறுத்துவது, தண்ணீர் குழாயை சொட்ட விடாமல், இறுக்கமாக மூடி வைப்பது எல்லாம், சிக்கன பழக்க நடைமுறைகள்.மேலும் சில நடைமுறைகள்...* ஆண்டிற்கு ஒருமுறை, சமையல் எரிவாயு அடுப்பை சுத்தம் செய்து பயன்படுத்தலாம்* கிழிந்த கைலிகளை வெட்டி தலையணை உறை தயாரிக்கலாம்* கடலை மாவு, சோற்று கற்றாழை தேய்த்து முகத்தை கழுவலாம்* வெட்டி வேர், ரோஜா இதழ் கலந்த தேங்காய் எண்ணெய் தலைக்கு பயன்படுத்தலாம் * சீயக்காயில், வெந்தயம், உலர்ந்த எலுமிச்சை தோல் கலந்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம்* விலை உயர்ந்த ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.தையல் மிஷின் வாங்கி, உன் ஜாக்கெட், சுடிதார்களை நீயே தைத்துக் கொள்ளலாம். இதனால், குடும்ப மாத செலவில் துண்டு விழுவதற்கு பதில், பணத்தை மிச்சப்படுத்தலாம். ஆடம்பரம் என்பது ஒரு புற்றுநோய்; அது மெதுவாக வாழ்க்கையை அரித்து விடும். விலைவாசி எவ்வளவு உயர்ந்தாலும், அதற்கேற்ப சிக்கனமாய் இருந்தால் வாழ்க்கை சொர்க்கமயமாகும்.நல்ல பழக்கவழக்கங்களை வைத்துள்ள யாரிடம் இருந்தும் அதை கற்றுக் கொள்ள சபதம் ஏற்றுக் கொள். வாழ்க்கை பிரகாசமாக அமையும்.- கூடை நிறைய அன்புடன், பிளாரன்ஸ்.