இளஸ்... மனஸ்... (167)
அன்பு சகோதரி ஜெனிக்கு, உங்கள் சகோதரி எழுதுவது...தனியார் நிறுவனத்தில், துப்புரவு பணியாளராக வேலை செய்கிறேன்; என் கணவர் கூலி தொழிலாளி.என் நிறுவனத்துக்கு வரும், சிறுவர்மலர் இதழை படிப்பேன்; என் பிரச்னைக்கு, ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள்.மகன் என்றால் எனக்கு உயிர்; வயது, 19; அவனுக்கு படிப்பு வரவே இல்லை; 'அனைவருக்கும் தேர்ச்சி' என்ற திட்டத்தால், எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டான்; அதற்கு மேல், ஒன்பதாம் வகுப்பில் தோல்வி. திரும்ப திரும்ப எழுதியும், தேர்ச்சி பெற முடியவில்லை. எந்த வேலைக்கு அனுப்பினாலும், திறமையாக செய்வதில்லை; சிறிது நாள் தான் செய்கிறான்; பின், வேலையை விட்டு விடுகிறான்; இவனது எதிர்காலத்தை நினைத்தால், மிகவும் கவலையாக உள்ளது. ஆனால், நல்ல பையன்; எல்லாருக்கும் அவனை ரொம்ப பிடிக்கும்; எந்த கெட்ட பழக்கமும் இல்லை. எங்கள் வீட்டருகில், குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது; குழந்தைகளுக்கான பொருட்கள், துணிகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்கி, விற்பனை செய்ய சொல்லி தரலாம் என்று தோன்றுகிறது... கூடவே இருந்து நாங்களும் உதவி செய்ய முடியும். யோசனை சரியா சகோதரி!அன்பு சகோதரிக்கு, வணக்கம்!தங்கள் மன பாரம் எனக்குப் புரிகிறது. இந்த காலத்து பிள்ளைகள், தேர்வில் ஏற்படும் தோல்விகளை தாங்குவதில்லை; உடனே, ஏடா கூடமான முடிவெடுக்கின்றனர். அதனாலயே, எட்டாம் வகுப்பு வரை, 'அனைவருக்கும் தேர்ச்சி' திட்டத்தை அரசு கொண்டு வந்தது. ஆனால், அதையே சாக்காக வைத்து, பல பிள்ளைகள் சரியாக படிப்பதில்லை. 'டிவி' மற்றும் இணையதளம், என்று பொழுதை கழிப்பது, வித விதமாக சாப்பிடுவது, ஆடை உடுத்துவது மற்றும் கைபேசியிலேயே காலத்தை செலவழிப்பது என இருக்கின்றனர்.பெற்றோரும் அவ்வளவு ஆண்டுகள் விட்டு, ஒன்பதாம் வகுப்பு வந்ததும், பிள்ளைகளை வற்புறுத்தி, தொந்தரவு செய்வதால் எப்படி படிப்பர்...உங்கள் பிள்ளைக்கு ஏதாவது ஒரு திறமை இருக்கும்; அது என்ன என்பதை அறிந்து, அதில் உற்சாகப்படுத்துங்கள்.அப்படி, எந்த விதத்திலும் ஆர்வம் காட்டாமல், பொறுப்பில்லாமல் இருந்தால், பணத்தின் அருமையை அவனுக்கு உணர்த்துங்கள்.பணம் சம்பாதித்து வந்தால் தான் சாப்பாடு என்பதை, மகனுக்கு, உணர்த்துங்கள்.'சின்ன வியாபாரம் செய்ய சொல்லித் தரவா...' என கேட்டிருந்தீர்கள்; அதுவும், நல்ல யோசனை தான். மொத்த சரக்கு கடைகளில், பொருட்களை, குறைந்த விலையில் வாங்கி, அவனை உட்கார வைத்து, வியாபாரம் பார்க்கச் சொல்லுங்கள்.'இந்த பொருட்களை, கடனில் வாங்கியுள்ளேன்; நீ சம்பாதித்து கொடுத்தால் தான், கடனை அடைக்க முடியும்; சாப்பாடு சமைக்க முடியும்...' என்று கூறுங்கள்.அவன் அதையும் பொறுப்பாக செய்யவில்லை என்றால், சமைக்காதீர்; பட்டினி கிடக்கட்டும்; ஒரு வேளை உணவு இல்லை என்றால், ஒன்றும் குடி முழுகி போய் விடாது.'சும்மா பிள்ளை... பிள்ளை...' என்று செல்லம் கொடுத்து, கெடுத்து விடாதீர்கள். சோம்பேறியா சாப்பிட்டு, சும்மா ஊரைச் சுற்றி பழகி விட்டால், பின், எந்த வேலையும் செய்ய உடம்பு வளையாது. அப்புறம், கொஞ்சம் கொஞ்சமாக உங்களை அடித்து, பணம் பிடுங்க ஆரம்பிப்பான். எனவே, இப்போதே நீங்கள் சொன்னது போல், வியாபாரத்தை ஆரம்பித்து, அவனை உட்கார வையுங்கள். நாலு காசை கையில் பார்த்ததும், அவனுக்கே உற்சாகம் வந்து விடும்; நிச்சயமாகவே மாறுவான்!- அன்புடன், ஜெனிபர் பிரேம்