உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்! (27)

அன்புள்ள ஆன்டி மெடோசுக்கு,நான், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி; வகுப்பில், முதல் மதிப்பெண் வாங்குவேன்; ஆனால், அறிவியல் பாடம் எதுவும் முழுமையாக புரிவதில்லை. மனப்பாடம் செய்து தான் தேர்வுகள் எழுதுகிறேன். எனக்கு, நல்ல உயர்வான வேலையில் சேர வேண்டும் என்று ஆசை. மருத்துவராக விருப்பமில்லை.என்ன படிப்பது என்று தெரியாமல் திணறிக்கொண்டு இருந்தேன். அப்போது தான், சிறுவர்மலர் இதழில், உலகில் பணக்காரர்கள் படிக்கும் பள்ளி பற்றி படித்தேன். அதில் குறிப்பிட்டுள்ள, லாரன்ஸ் லில்லி பள்ளி, அமெரிக்கன் பள்ளி, இன்ஸ்டியூட் லி ரோசி என்பவை என்னை ஈர்த்தன.இந்த பள்ளிகளில், ஏதேனும் ஒன்றில், ஆசிரியையாக பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளேன். இவற்றில், ஆசிரியையாக சேர, என்ன படிக்க வேண்டும்; எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கூறுங்கள் ஆன்டி ப்ளீஸ்... உங்கள் பதிலை, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!உயர்ந்த லட்சிய வாசலில் நிற்கும் அன்பு மகளே...இந்த வயதிலேயே எதிர்காலத்தை திட்டமிட துடிக்கும் உன் எண்ணத்தை மிகவும் பாராட்டுகிறேன். பலர், படிக்கும் காலத்தில், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து, அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை. பெற்றோர் பார்த்துக்கொள்வர் என்ற எண்ணத்தில், பொறுப்பை தட்டிக்கழித்து இலக்கின்றி, கடமைக்காக படிக்கின்றனர். அதுபோல இல்லாமல், எதிர்காலத்தில், அதுவும் மிகவும் பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்ற வேண்டும் என்ற இலக்குடன், அதற்கான முன்னேற்பாடுகளில் களமிறங்கியுள்ள உன்னை எண்ணி பெருமைப்படுகிறேன். உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காலம், உனக்கு எல்லா நன்மைகளையும் கையில் அள்ளித் தரும்.பெற்றோருக்கு, அடுத்த இடத்தில் குருவை வைத்து வணங்குகிறோம். ஆசிரியர் தொழில் புனிதமானது; அத்தகைய போற்றுதலுக்கு உரிய பணியில் உயர, முதலில், பள்ளி மேல்நிலை வகுப்பில், உனக்கு விருப்பமான, கலை, அறிவியல் அல்லது பொருளாதார பாடப்பிரிவை தேர்வு செய்.பிளஸ் 2வில், தேர்ச்சி பெற்றபின், மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பை கவனமாக முடித்து விடு; அதில், அனைத்துப் பாடங்களிலும், நல்ல மதிப்பெண் எடுப்பது முக்கியம்.பின், இரண்டு ஆண்டுகள், முதுகலை பட்டம் பயில வேண்டும். நம் நாட்டில் உள்ள கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' எனப்படும், தேசிய தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற வேண்டும். இத்தேர்வில் பங்கேற்க, முதுகலை படிப்பில், குறைந்தபட்சம், 55 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருப்பது அவசியம். பல்கலைக்கழகங்களில், ஆய்வுக் கல்வியான, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., ஆய்வுப் பட்டத்துடன், பேராசிரியராக பணியாற்றலாம்.பல்கலைக்கழக மானியக் குழு, ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில், 'நெட்' தேர்வு நடத்துகிறது; இதில், தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் உள்ள, பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில் விரிவுரையாளராக பணியாற்றலாம்.ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - எய்ம்ஸ், பிட்ஸ் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணிகளுக்கு, இந்தியாவில் அதிக ஊதியம் வழங்குகின்றன.பொதுவாக, உதவி பேராசிரியராக பணியாற்றினால், ஆண்டுக்கு, எட்டு லட்ச ரூபாய் வரை ஊதியம் பெறலாம்.இதுவே, தொழில்நுட்ப கல்லுாரிகள், இயந்திர பொறியியல் கல்வி நிறுவனங்கள், உயிரி தொழில்நுட்ப கல்வி மையங்கள், ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்புகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, ஆண்டுக்கு, ஆறு கோடி ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும்.மகளே... நீ இங்கு இளங்கலை முடித்து, வெளிநாட்டில், முதுகலை மற்றும் இரண்டு ஆண்டுகள் எம்.பில்., முடிக்கலாம். அல்லது இந்தியாவில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், வெளிநாடுகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க விண்ணப்பிக்கலாம். அங்கு படிக்கும் போது, நீ விரும்பும் பணக்கார பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு உன்னைத் தேடி வரும்.உன் எண்ணம் முழுமையாக நிறைவேற இனிய வாழ்த்துகள் மகளே!அன்புடன், மெடோஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !