உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்... (51)

அன்பு சகோதரி ஜெனிக்கு, ---------சென்னையில் உள்ள புகழ்பெற்ற, ஆண்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை எழுதி கொண்டது. சிறுவர்மலர் புத்தகத்தை என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறேன்... அவ்வளவு நன்றாக இருக்கிறது. சகோதரி, உங்களிடம் தான் என் மனக் கஷ்டத்தை சொல்ல முடியும்... நீங்கள், அதற்கு சரியான ஆலோசனை கூறுவீர்கள் என நம்புகிறேன்.இன்றைய காலத்து மாணவர்கள், மிகவும் முரடர்களாய், கோபக்காரர்களாய் இருக்கின்றனர். பொய், கெட்ட வார்த்தைகள் சகஜமாய் பேசுவது, பெண் ஆசிரியர்களை கேவலமாய் கிண்டல் செய்வது, என வயதுக்கு மீறி நடந்து கொள்கின்றனர்.இவர்களை கட்டுப்படுத்துவதற்குள், போதும் போதும் என்றாகி விடுகிறது; அடங்குவதே இல்லை. இவர்கள் செய்யும் தவறுகளை கண்டித்தால், எங்களை பற்றி அசிங்கமாக, 'போர்டில்' எழுதி வைப்பதும் இல்லாமல், எங்கள் மீதே பழி போடுகின்றனர்.பெற்றோரிடம் வேறு மாதிரி நடந்து கொள்வதால், இவர்களை பற்றி பெற்றோரிடம் நாம் என்ன சொன்னாலும், ஏற்று கொள்ளாமல், எங்களிடம் சண்டைக்கு வருகின்றனர். தற்போது, சி.சி.டிவி., கேமரா மூலம், இவர்களது அட்டகாசங்களை நாங்கள் போட்டு காட்டிய பிறகு தான், 'எம் புள்ளையா இது' என அதிர்ச்சி அடைகின்றனர் பெற்றோர்.'ஏண்டா ஆசிரியர் தொழிலுக்கு வந்தோம்' என நினைத்து, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்... 'எந்த பிள்ளை, எக்கேடு கெட்டால் எனக்கென்ன... நம்ம வேலையை மாத்திரம் செய்துவிட்டு வந்தால் போதும்' என்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன். நான் முடிவெடுத்தது சரியா... ஒரு பக்கம் மனசாட்சி என்னை உறுத்துகிறது. பதில் சொல்லுங்க சகோதரி!வணக்கம் டீச்சர்... உங்களது மனக் குமுறல் நூற்றுக்கு நூறு உண்மையே... இந்த காலத்தில் முக்கால்வாசி பேர், ஒரே ஒரு குழந்தையை வைத்துள்ளனர். அதிக செல்லம் கொடுத்து வளர்க்கின்றனர். நெட், செல்போன், 'டிவி' மூலம் பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றனர்.இவற்றையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர், அதை தம் பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகின்றனர், என்பதை கவனிப்பதே இல்லை.இந்த காலத்து குழந்தைகளை, 'அன்பு' என்ற ஒரு ஆயுதத்தை கொண்டு தான் அடக்க முடியும் சகோதரி. என்ன தான் ரவுடி மாணவனாக இருந்தாலும், 'மிஸ்' சொல்லிட்டாங்க என்றால், அதை மட்டுமே அவன் ஏற்று கொள்வான். 'இது சரியில்லடா...' என்று பெற்றோர் சொன்னாலும், 'எங்க மிஸ் இப்படித்தான் சொல்லி கொடுத்தாங்க... இது தான் சரி!' என்பான்.உங்களுடைய சொல்லுக்கு, இவ்ளோ மதிப்பு இருக்கிறது. எனவே, நீங்கள் அவர்களை அன்பாக தட்டிக்கொடுத்து, அவனது பிரச்னையை கேளுங்க... அன்பான முறையில், அவர்களது தவறுகளை சுட்டிக் காட்டி, அதனால் ஏற்படும் பின் விளைவுகளை, அவர்களுக்கு விளக்கி சொல்லுங்க.இன்றைய குழந்தைகளுக்குள் நிறைய ஆற்றல், துணிச்சல், இருக்கிறது. உதாரணம். என்ன மாடல் செல்போனை கொடுத்தாலும், அதை இயக்கிப் பார்த்து வெளியே வந்து விடுகின்றனர். ஆனால், நாமோ எங்கே, 'ரிப்பேர்' ஆகி விடுமோ என்று பயந்து பயந்து, 'ஆன் - ஆப்' செய்வதோடு நிறுத்தி கொள்கிறோம்.ஒருமுறை, மிசோரம் மாநிலத்தில் நடந்த சம்பவம் இது... இரண்டு சிறுவர்கள் வேலியில் மின்சாரம் பாய்வது தெரியாமல், அதை தொட்டு விட்டனர். 'ஷாக்' அடித்ததால், மின் வேலியில் இருந்து கையை எடுக்க முடியாமல் கதறினர்.அதைப் பார்த்த பெரியவர்கள் பலர், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க, அப்போது அந்த வழியே வந்த, 15 வயது சிறுவன், வெறுங்கையால், அவர்களை தொட்டால் தனக்கும், 'ஷாக்' அடிக்கும் என்பதை உணர்ந்து, சட்டென்று இருவரின் தலைமுடியை பிடித்து இழுத்து காப்பாற்றினான்.'முடியில் மின்சாரம் பாயாது' என்ற அறிவியல் உண்மையை அவன் அறிந்திருந்ததால், தக்க சமயத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளான். ஆகவே, இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகள்; தைரியம் மிக்கவர்கள். அவர்களும் வீடுகளில், பெற்றோரால் பல விதமான மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர். அத்துடன், ஆபத்து என்று வரும்போது, தங்கள் உயிரையும் பாராமல் களத்தில் குதித்து விடும் இயல்பினர், 'இளம் கன்று பயம் அறியாது' அல்லவா?டீச்சர்... அன்பு எனும் ஆயுதம் கொண்டு இவர்களை நெறிபடுத்தினால் மட்டுமே அடங்குவர். உங்களால் மட்டுமே முடியும். அவர்களை உங்கள் மகனாக நினைத்து, அன்பு செலுத்தி பாருங்கள். அப்போது, அவர்கள் செய்யும் தவறுகள், உங்களுக்கு பெரிதாக தெரியாது. அன்பு சகல தவறுகளையும் மன்னிக்கும் ஆற்றல் கொண்டது.இந்த அட்வைஸ் பெற்றோருக்கு...பெற்றோரே... ஏதோ பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டோம்... இனி நம் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், அவர்களது நடவடிக்கைகளை முழுவதும் கவனித்து, சிறு வயதிலேயே ஒழுக்கத்தை கற்று கொடுங்க. படிப்புடன், நேர்மை, சத்தியம் இவற்றை அவர்கள் மனதில் பதியுங்கள். ஒரு அரிச்சந்திரனின் நாடகம், உண்மை பேசும் ஒரு காந்திஜியை நமக்கு தந்தது. நீங்கள் சொல்லி தரும் நல்ல விஷயங்களால் தான் எதிர்காலத்தில் நல்ல சந்ததியர் உருவாக முடியும். அது உங்களது கையிலும், ஆசிரியர்கள் கையிலும் தான் உள்ளது. நீங்கள் இருவரும் சேர்ந்து, எதிர்காலத்தில் ஆரோக்கியமான ஒரு சந்ததியை உருவாக்க வாழ்த்துக்கள்!அன்புடன்,ஜெனிபர் பிரேம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !