உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்...

அன்பு சகோதரி ஜெனிபருக்கு, என் மகள் பிளஸ் +2 படிக்கிறாள். படிக்க வேண்டிய நேரங்களில், 'டிவி' பார்க்கிறாள், செல்போனில் தோழிகளிடம் பேசி அரட்டை அடிக்கிறாள். புத்திமதி சொன்னால், ஆத்திரத்துடன் எதிர்த்து பேசுகிறாள்; மிகவும் கோபப்படுகிறாள்.நாங்கள் நடுத்தரக் குடும்பம் தான்; ஆனாலும் என் மகள் பணக்கார பள்ளியில் படிக்கிறாள். மகளுடன் படிக்கும் பெண்கள் எல்லாம் மிகுந்த வசதியான வீட்டுப் பெண்கள். நினைத்த நகைகள், ஆடைகளை உடனடியாக வாங்கிக் கொள்ளும் வசதி பெற்றவர்கள். என் மகள் அவர்களைப் போல் வாழவும், நினைத்ததை சாதிக்கவும் நினைக்கிறாள். குடும்ப நிலைமை, வறுமை, பற்றாக்குறையை எடுத்துச் சொன்னால், எரிந்து விழுகிறாள். 'வசதிவாய்ப்பு இல்லையென்றால் ஏன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறீர்கள்?' என்று நாக்கைப் பிடிங்கிக் கொள்ளும்படி விஷத்தைக் கக்குகிறாள்.எவ்வளவு தன்மையாக எடுத்துக் சொன்னாலும் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. கடுமையாக கண்டித்தால், அறைக்கதவை சாத்தி தாழ்போட்டுக் கொள்ளுகிறாள். சாப்பிடக் கூட வருவதில்லை. இவளால் மற்றவர்கள் முன்னிலையில் தலைகுனிவு. மிகுந்த மன வேதனை அடைகிறோம். ஏழ்மையுடனும், வறுமையுடனும் இருப்பது என் குற்றமல்லவே! அவளை எப்படித்தான் திருத்தி நல்வழிப்படுத்துவது என்றே புரியவில்லை சகோதரி... என் பாரத்தை உங்களிடம் இறக்கி வைத்துவிட்டேன். நீங்கள்தான் பதில் சொல்லணும்!உங்களது இதே கேள்விதான் இன்று பலரது குடும்பங்களிலும் ஒலிக்கிறது. இது, 'அட்வைஸ்'சை விரும்பாத வயது. இன்றைய தலைமுறை மிகமிக சுயநலவாதிகளாகவே உள்ளனர். ஆடம்பர வாழ்க்கையும், தன் சுகமும்தான் இவர்களது குறிக்கோள்.சகோதரி... உங்களுடைய தகுதிக்கு மீறின பள்ளியில் மகளை சேர்த்துவிட்டு, அவள் மற்ற பிள்ளைகளைப் பார்த்து ஆடம்பரமாக வாழ ஆசைபடுகிறாள் என்பது யாருடைய தப்பு? அவளுடைய சூழ்நிலையை சற்று யோசித்துப் பாருங்கள்... மற்றவர்களைப் பார்த்து ஆசைப்படத்தான் தோன்றுமே ஒழிய, உங்களது தியாகங்கள் எதுவும் அவளுக்குப் புரியாது.நாளடைவில் உங்களை தங்களுடைய, 'பேரன்ட்ஸ்' என்று சொல்லி நண்பர்களிடம் அறிமுகப்படுத்தவே வெட்கப்படுவா... அத்துடன் தோழிகள் வீட்டு 'பர்த்டே பார்டீஸ்'க்கு போய்விட்டு வந்த பிறகு, தோழிகளை தங்கள் வீட்டுக்கு அழைத்து வரவே வெட்கப்படுவாள். இது அவர்கள் பக்கம் உள்ள பிரச்சனை. இதை எல்லாம் என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா?- எந்த பள்ளியில் படித்தாலும், நல்லா படிக்கும் பிள்ளைகள், 'ஷைன்' ஆகத்தான் செய்வாங்க. எத்தனையோ மாநகராட்சி பள்ளியில் படித்த பிள்ளைகளில் சிலர், நன்கு படித்து அமெரிக்காவில் வேலை செய்கின்றனர். ஆனால், பணக்கார பள்ளிகளில் படித்த பிள்ளைகளில் சிலர், சாதாரண வேலையிலும் இருக்கின்றனர்.ஒன்று செய்யுங்க சகோதரி... உங்கள் மகள் +2 என்பதால் கேபிளை, 'கட்' பண்ணுங்க. போனில் தோழிகளிடன் பேசுவதற்கு ஒரு சில நேரங்கள் மட்டும் அனுமதியுங்கள்... இந்த வயதில் உடல் வளர்ச்சி அடைந்த அளவிற்கு மன வளர்ச்சி இருக்காது என்று மனோதத்துவ டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே, மகளை கூப்பிட்டு, உங்க வீட்டு வருமானம் எவ்வளவு என்பதைச் சொல்லி இந்த மாதத்திற்கான செலவுகள் இவ்வளவு உள்ளது. இதற்கு, 'பட்ஜெட் போடும்மா...' என்று சொல்லுங்க. இதுதான் நமது வருமானம் இதைக் கொண்டுதான் வாழணும். இனிமேல், நீ படிச்சி நல்ல வேலைக்கு போனால்தான், நீ விரும்பும் ஆடம்பர வாழ்க்கை வாழ முடியும்; அதற்காகத் தான் இந்த, 'பெஸ்ட்' பள்ளியில் உன்னை போட்டிருக்கோம் என்று கூறுங்கள்.'பட்ஜெட்' போடும் போதே தலை சுற்றிப் போய்விடும் அவளுக்கு. இந்த வருமானத்தில் எப்படி அவளுக்கு, 'பீஸ்' கட்டுகிறீர்கள் என்பதையும் சொல்லுங்க.'மகளே... ஒன்று செய்வோம்... பேசாமல் உன்னை மாநகராட்சி பள்ளிக்கு மாற்றி விடுகிறோம். அப்போ வருடம் முழுவதும் நாங்க கட்ட வேண்டிய, 'பீஸ்' மிச்சமாகும். அந்த பணத்தைக் கொண்டு உனக்கு விதவிதமான டிரஸ்... நீ விரும்பியதை எல்லாம் வாங்கித் தருகிறோம்... 'மாநகராட்சி பள்ளியில் மற்ற மாணவிகளை விட, ராணிபோல இருக்கலாம். எல்லாரும் உன்னை பணக்காரி என்று நினைத்துக் கொள்வர். இதுதானே உன் விருப்பம்?' என்று ஒரு போடுபோடுங்கள். அவ்ளோதான் அப்படியே, 'ஆப்' ஆகிவிடுவாள். பணக்கார பள்ளியில் படிக்கும் அவளால், இப்படி கீழே இறங்கி வரவே முடியாது. பொட்டிப் பாம்பாகி விடுவாள்.அப்போது, அவளை அன்பாக தலையை தடவிக் கொடுத்து சொல்லுங்க... 'நீ விரும்பின ஆடம்பர வாழ்க்கையை அடையணும்னா உனக்கு கடவுள் கொடுத்திருக்கும் நல்ல பள்ளியை பயன்படுத்தி, நன்கு படித்து முன்னேறு மகளே...''நீ எங்களை கேட்ட கேள்வியை அப்போதான் உன் பிள்ளைகளும் உன்னை கேட்கமாட்டார்கள்' என்று சொல்லுங்க.உங்கள் மகள் படிப்பதற்கு ஏற்ற அமைதியான சூழ்நிலையை வீட்டில் உருவாக்கி கொடுங்கள். பால், பழங்கள், ஞாபக சக்திக்கு பாதாம் பருப்பு, எனர்ஜி டிரிங்ஸ் எல்லாம் கொடுத்து, அவளுக்காக, 'டிவி'யை நீங்களும் தியாகம் செய்துவிட்டு, தூங்காமல் அவளுடன் அமர்ந்து அவள் படிப்பதை கவனியுங்கள். அன்பு காட்டுங்கள். இந்த ஒரு வருட படிப்பு அவள் வாழ்க்கைக்கு எத்தனை முக்கியமானது என்பதை செயல்கள் மூலம் உணர்த்திக் காட்டுங்கள்.உங்களது அன்பு, தியாகம், பொறுமை அவள் மனதை மாற்றும். நல்ல மதிப்பெண்கள் பெற்று அவளது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!-ஆசிர்வாதங்களுடன்,ஜெனிபர் பிரேம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !