உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (195)

அன்புள்ள ஆன்டி...என் வயது, 19; இளங்கலை, விலங்கியல் 2ம் ஆண்டு படிக்கும் மாணவன். ஒரு நாளில், மூன்றில் ஒரு பங்கு நேரத்தை துாங்க செலவு செய்கிறோம். ஒரு மனிதன், 60 வயது வரை உயிர் வாழ்கிறான் என்றால், 20 ஆண்டுகள் துாங்கியே கழித்து விடுகிறான்.ஒரு மனிதன், துாங்காமல், ஆயுள் முழுக்க செயல்பட ஏதாவது, ஆராய்ச்சிகள் நடக்கின்றனவா... எட்டு மணி நேர துாக்கத்துக்கு பதில், ஒரு மாத்திரை சாப்பிட்டால் போதும் என்ற நிலை வந்தால், சூப்பராக இருக்கும் அல்லவா... உரிய பதில் சொல்லுங்க ஆன்டி.இப்படிக்கு,எல்.பி.பூமான் லாசரஸ்.அன்பு மகனே...துாக்கம் என்பது தவணை முறை மரணம். தொடர்ந்து, ஓடும் இயந்திரத்துக்கு, ஓய்வு தேவைப்படுவது போல, 16 மணி நேரம் உழைக்கும் மனிதருக்கு துாக்கம் தேவைப்படுகிறது. துாக்கம் என்பது, ஒரு உயிரியல் கட்டாயம்.துாக்கத்தால் கிடைக்கும் நன்மைகள்...* மூளை புதிய தகவல்களை சேமித்து, நச்சு கழிவு பொருட்களை வெளியேற்றுகிறது* நியூரான்கள் தகவல் பரிமாற்றம் செய்து, மூளை செயல்பாட்டை சீரமைக்கிறது* உடல் அணுக்களை பழுது பார்த்து, சக்தியை வீரியமாய் வெளிப்படுத்துகிறது* உடலின் எடை கண்காணிக்கப்படுகிறது; காயங்கள் ஆறுகின்றன* ஹார்மோன்களும், புரத சத்துக்களும், உற்பத்தி செய்யப்படுகின்றன.மனிதரின் துாக்கத்தில், ஐந்து நிலைகள் உள்ளன. ராண்டி கார்டனர், என்பவர் தொடர்ந்து, 264 மணி நேரம் துாங்காமல் இருந்திருக்கிறார். அமெரிக்கா, கென்டிகியை சேர்ந்த வியாட் ஷா தொடர்ந்து, 274 மணி நேரம் துாங்கியே கழித்திருக்கிறார்.ஒரு மனிதன், துாங்காமல், ஆயுள் முழுக்க செயல்பட, எவ்வித ஆராய்ச்சியும், எந்த நாட்டு விஞ்ஞானியும் நடத்தவில்லை. துாக்கத்துக்கு மாற்றாக, மாத்திரை சாத்தியமே இல்லை.விழித்திருக்கும் நேரத்தை நீட்டிக்க ஒரு யோசனை கூறுகிறேன். இரவு, பாதாம் பாலோ, இளநீரோ குடித்து, 9:00 மணிக்கெல்லாம் துாங்க செல்.அதிகாலை, 5:00 மணிக்கு எழுந்து, முந்தைய நாள் பாடங்களை படி; காலை, 7:30 மணிக்கு, மற்ற மாணவர்கள் எழுவர். உனக்கு, தினமும் உபரியாக, இரண்டரை மணி நேரம் கிடைக்கும். ஆண்டுக்கு, 40 நாட்கள் அதிகமாக கிடைக்கும்.விடுமுறை நாட்களில், 'பாலிபேசிக் ஸ்லீப்' எனப்படும் பல கட்ட துாக்கத்தை மேற்கொள். ஒரு முறைக்கு, 20 நிமிடம் வீதம், ஆறு முறை துாங்கு.ஒவ்வொரு துாக்கத்துக்கும், மூன்று மணி நேரம் இடைவெளி. மொத்தம், 120 நிமிட துாக்கம்.ஆனால், எட்டு மணி நேரம் துாங்கிய ஓய்வு கிடைக்கும். அசதி நீங்கும்; 40 வயதை தாண்டியோர், மதிய உணவுக்கு பின், 15 - 30 நிமிடம் குட்டி துாக்கம் போடலாம்; இதயத்துக்கு நல்லது.கனவுகளின் நந்தவனம் துாக்கம். ஆழ்ந்து, துாங்கி வெற்றி கனவுகள் காண் செல்லமே!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !