இளஸ் மனஸ்! (212)
அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது, 16; பிளஸ் 1 படிக்கும் மாணவி. சிறுவர், சிறுமியருக்கு, எந்த வயதில், கெட்ட குணங்கள் வந்து சேருகின்றன. கெட்ட குணங்கள், அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியிடமிருந்து பிறவியிலேயே வருகிறதா... அல்லது வேறு வழியில் தொற்றுகிறதா...கெட்ட குணங்கள் முழுமையாக அகன்று, ஒரு ஆணோ, பெண்ணோ, நல்ல மனிதர்களாக மாற, என்ன செய்ய வேண்டும். விளக்கி கூறுங்கள் அம்மா...இப்படிக்கு,உஷா வைரவேந்தன்.அன்பு மகளுக்கு,ஒரு மனிதனுக்கு, ஏழு பருவங்கள் உண்டு. அவற்றை பற்றி பார்ப்போம்... * சிசு, 0 - 1 வயது* குறுநடை போடும் குழந்தை, 2 - 4 வயது* குழந்தை, 5 - 12 வயது* பதின்ம வயது, 13 - 19 வயது* வயதுக்கு வந்தோர், 20 - 39 வயது* நடுத்தர வயதினர், 40 - 59 வயது* மூத்த குடிமக்கள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்.மனிதன் ஒரு சமூகமாகி விட்ட மிருகம். ஒருவன், சிசு பருவத்திலிருந்து, 12 வயதுக்குள் பெற்றோர், உறவினர், ஆசிரியர்கள், விளையாட்டு தோழர்கள் மற்றும் அக்கம் பக்கத்தவரிடம் இருந்து, கெட்ட குணங்களை, பெரும்பாலும் கற்றுக் கொள்கிறான்.மூத்தோரின் செயல்களை நகல் எடுக்கிறான்; பிறக்கும் போது, எதுவும் எழுதப்படாத சிலேட்டு போல இருக்கிறது மனம்.சமூகத்திடமிருந்து, ஒரு குழந்தை கற்றுக் கொள்ளும் தீய குணங்களை கீழ் உள்ளவாறு வரையறுக்கலாம்...* வார்த்தைகளால் பிறரை காயப்படுத்துதல்* பொய் கூறுதல், ஏமாற்றுதல்* நன்றி கெட்ட தனமாய் நடந்து கொள்ளுதல்* பேராசையுடன் செயல்படுதல்* பிறரை அவமரியாதை செய்தல்* திருட்டுத்தனமாக பொருள் ஈட்ட முயலுதல்* சோம்பலால் நற்செயல்களை தள்ளிப்போடுதல்* தகாத வார்த்தை பேசி அவமதித்தல்* 'டிவி' மற்றும் அலைபேசி மிதமிஞ்சி உபயோகித்தல்* சிணுங்கி காரியம் சாதிக்க முயலுதல்* பிறர் மீது பழி சொல்லல்* மன கிளர்ச்சியால் வன்முறையில் ஈடுபடுதல்* நிதானம் இழந்து, வெறி கொண்டு நடத்தல்* துாங்கும் நேரத்தில் அல்சாட்டியம்.- இன்னும் பல தீய நடத்தைகளும் உண்டு. தீய பழக்க வழக்கங்களிலிருந்து விலகியிருக்க, கீழ்க்கண்டவற்றை கடைபிடிப்பது நலம்...வீடு, பள்ளி, விளையாடும் இடத்தில், மூத்தவர்கள், குழந்தைகளுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும்; தீமையிலிருந்து பாதுகாத்து, தீயவர்களை அப்புறப்படுத்த வேண்டும்குழந்தைகள் செய்யும் தவறுகளை குற்றம் சாட்டும் விதமாய் சுட்டிக்காட்டாமல் ஆலோசனை கூறி திருத்தலாம். நல்ல பழக்க வழக்கங்களை அறிமுகப்படுத்தலாம். சுயக்கட்டுப்பாட்டை பேணும் குழந்தைகளுக்கு பரிசளிக்கலாம். நல்ல குணங்களை வெளிப்படையாக பாராட்டி மகிழ்ச்சி படுத்தலாம். மனசாட்சிக்கு பயந்து நடக்க கனிவாய் சொல்லித் தரலாம். தீய குணங்கள், குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும்; நல்ல குணங்கள், பேரானந்தத்தை தரும் என்பதை உணர்த்தலாம். துாங்க செல்லும் முன், நீதிக்கதைகள் சொல்லலாம்; மனநல நிபுணர்களை வைத்து, மரபு சார்ந்த தெரபி தரலாம்.நல்ல புத்தகங்களை குழந்தைகளுக்கு படிக்க கொடுப்பது நலம் பயக்கும்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.