உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (127)

அன்பு பிளாரன்ஸ்...நான், 16 வயது சிறுமி; பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறேன்; ஐந்து வயதிலிருந்தே பார்வை கோளாறு இருக்கிறது. அத்துடன், தலைவலியும், அவ்வப்போது வருகிறது. இரண்டையும் தடுக்கும் வகையில், 'பவர் கிளாஸ்' அணிகிறேன். தொடர்ந்து மூக்கு கண்ணாடி அணிவதால், மூக்கின் இருபுறமும், சிறு பள்ளம் தோன்றியுள்ளது. கண்ணாடி அணியாத போது, முகம் ஒரு மாதிரி, வெறுமையாக இருக்கும்; மூக்கு கண்ணாடியை கழற்றினால், கண்களையே கழற்றி வைத்தது போல உணர்கிறேன். உறவினர்களும், தோழியரும், 'சோடாபுட்டி' என பட்டப்பெயர் சூட்டி அழைக்கின்றனர். அதனால் என் மீதே எனக்கு வெறுப்பாக உள்ளது; அசிங்கமாக, என் முகத்தை உணர்கிறேன். இதை போக்க என்ன செய்யலாம் ஆன்டி...அன்பு மகளுக்கு...எந்த காலத்தில் நீ இருக்கிறாய்... பார்வை குறைபாடு இல்லாத ஆண், பெண் எங்கிருக்கின்றனர். குடும்பத்தில் பெற்றோரும், குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். லென்ஸ் கார்ட், டாட்டா ஐ கேர், சேஸ், ஜான் ஜாக்கப்ஸ், டோமி, ஹிப்பிகர், ரேபான், ஆக்சிடோ, பாஸ் ஆரஞ்சு பிராண்டுகளில், மூக்கு கண்ணாடி கூவி கூவி விற்கப்படுகின்றன.பழங்காலத்திலே மூக்கு கண்ணாடி கண்டுபிடித்திருந்தால், மன்னன் ராஜராஜசோழனும், செங்கிஸ்கானும், நெப்போலியனும் அதை அணிந்து தான் போருக்கு சென்றிருப்பர்.கடந்த தலைமுறையில், மூக்கு கண்ணாடி அணிவதை, ஆளுமை குறைபாடாய் கருதினர். ஆனால், இப்போதோ, மூக்கு கண்ணாடி அணிவதை, கூடுதல் ஆளுமையாய் கருதுகின்றனர்.எனக்கு தெரிந்த எத்தனையோ பெண் குழந்தைகள், எவ்வித பார்வை குறைபாடும் இல்லாமலேயே, ஸ்டைலுக்காக, மூக்கு கண்ணாடி அணிகின்றனர். மூக்கு கண்ணாடி அணிந்த பெண்களை வெறுத்து ஒதுக்கிய காலம் ஒன்றிருந்தது. இப்போது, 'மூக்கு கண்ணாடி அணிந்த மணப்பெண் தேவை' என, விளம்பரம் செய்யும் நிலை வந்திருக்கிறது. மூக்கு கண்ணாடி அணிவது பிரச்னையாக இருக்கிறது என்றால், 'கான்டாக்ட் லென்ஸ்' பொருத்திக் கொள். சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது வேறு விஷயம்.'சோடா புட்டி கண்ணாடி...' என, யாராவது அழைத்தால், அவர்களை பார்த்து சிரி. 'கண்ணாடி அணிவது பெரிய விஷயமா... உங்கள் குடும்பத்தில் யாரும் கண்ணாடி அணியவில்லையா... நான், கண்ணாடி அணிவதைப் பார்த்து பொறாமைப்படுகிறாயா... பொறாமைப்பட்டால் நீயும் ஒரு கண்ணாடி வாங்கி அணிந்துக் கொள்...' என கூறு. ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை மூக்கு கண்ணாடியை கழற்றி, கண்ணாடி பதிந்த மூக்கு தடத்தை நீவி விட்டு, அவ்வப்போது முகத்தை, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம். தினமும், மீன் எண்ணெய் கேப்ஸ்யூஸ் எடுத்துக்கொள்.சாப்பாட்டில் எதாவது ஒரு கீரையை சேர்ந்துக் கொள்; முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று, 'உலகிலேயே அழகான பெண், கண்ணாடி அணிந்த நான் தான்...' என, சுயவசியம் செய்; ஒரு நாளில், சில மணிநேரங்கள், மூக்கு கண்ணாடி அணியாமல் இருக்க பழகு!கண்பார்வை குறைபாடு பாதிப்பு நீங்க...* தினமும், அன்னாசிபழம், பால், முட்டைகோஸ், கேரட், மாம்பழம், மலைவாழைப்பழம் சாப்பிடலாம்* கடுக்காய் தோல், நெல்லிக்காய் காய வைத்து, பொடி செய்து, தினமும், மூன்று கிராம் சாப்பிடலாம்* சீரகம், கொத்தமல்லி விதை, வெல்லம் மூன்றையும் சமமாக எடுத்து, பொடியாக்கி, காலை, மாலை சாப்பிடலாம்* சர்க்கரை வள்ளிக்கிழங்கை அவித்து சாப்பிடலாம்* நல்ல குருக்களின் அறிவுரைப்படி யோகாசனம் செய்யலாம்.மூக்கு கண்ணாடி அணிந்து, பொதுவாழ்வில் வெற்றி பெற்ற ஆண், பெண்களை அழகிய முன்மாதிரிகளாக கொள். அக அழகையும், தன்னம்பிக்கையையும், பெண்மையையும், மிடுக்கையும், கல்வியறிவையும் முகத்தில் கொண்டு வந்து தேக்கு; தாழ்வு மனப்பான்மை தலைதெறிக்க ஓடி விடும் செல்லமே.- அன்புடன், பிளாரன்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !