இளஸ் மனஸ்! (202)
அன்பு ஆன்டிக்கு...நான், 16 வயது பெண். பிளஸ் 1 படிக்கிறேன். எனக்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் அதிகம். பாம்புகளுக்கு கால் இல்லை. அதனால், பாம்புகள் கவலைப்படுமா... கால்கள் உள்ள மற்ற உயிரினங்களைப் பார்த்து பாம்புகள் பொறாமைப்படுமா... கால்களுடன், பாம்புகளை யோசித்து பாருங்கள் ஆன்டி... செமையாக இருக்கும். பாம்புகளின் மன நிலையில் நின்று பதில் சொல்லுங்கள்.இப்படிக்கு,ஜி.தமிழ் நிலா.அன்பு மகளுக்கு...ஊர்வன வகையை சேர்ந்த பாம்புகளின் அறிவியல் பெயர் சர்பென்டஸ். பாம்புகளில், 3,600 வகைகள் உள்ளன. பாம்புகள் குளிர் ரத்த ஜீவராசிகள் மற்றும் மாமிச பட்சினிகள். தசையை பயன்படுத்தி, செதில்களை தள்ளி தள்ளி தரையிலோ அல்லது வேறெந்த பரப்பிலோ நகர்கின்றன. பாம்புகளுக்கு மரம் ஏறுவதும், நீந்துவதும், தவழ்வதும் மிக எளிது. 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன், பாம்புகளுக்கு கால்கள் இருந்திருக்கின்றன. காலப்போக்கில், அவை கால், தோள் மற்றும் இடுப்பையும் இழந்திருக்கின்றன.ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த லாமார்க் என்ற இயற்கை ஆராய்ச்சியாளர், 'யூஸ் அண்ட் டிஸ்யூஸ் தியரி' என்ற தத்துவத்தை எழுதினார். அதில், 'ஒரு உயிரினத்துக்கு தேவைப்படாத, உடல் உறுப்பு பல தலைமுறைகளுக்கு பின் காணாமல் போய் விடுகிறது. ஒரு உயிரினம் அதிகமாய் பயன்படுத்தும் உறுப்பு, பல தலைமுறைக்கு பின், தேவைக்கேற்ப வளருகிறது. பலம் பெறுகிறது...' என கண்டறிந்துள்ளார்.உதாரணமாய், ஒட்டகச்சிவிங்கி, உயரமான கிளைகளில் இருக்கும் இலைகளை சாப்பிட, கழுத்தை நீட்டி நீட்டி பழகியதால் தேவைக்கேற்ப நீண்டு விட்டது. மனிதருக்கு இருந்த வால், தேவைப்படாத காரணத்தால், காணாமல் போய் விட்டது. இப்போது, நீ கேட்ட கேள்விகளுக்கு வருவோம்...கால் இல்லை என்று பாம்புகள் வருத்தப்படுமா, கால்கள் உள்ள உயிரினங்களை பார்த்து பொறாமைப்படுமா... மனிதர்களுக்கு ஆறறிவு. மிருகங்களுக்கு ஐந்தறிவு. மனிதன் தான், தன்னிடம் ஒரு பொருள் இல்லையே என துக்கப்படுவான். பிறரின் பொருளை பார்த்து பொறாமைப்படுவான். பாம்புகள் தன்னை பற்றியோ, தன் உடலுறுப்புகள் பற்றியோ சிந்திக்காது. மிருகங்களின் ஒரே குறிக்கோள் இரை தேடுவது, இனப்பெருக்கம் செய்வது, உயிர் வாழ்வது.மிருகங்களும், பறவைகளும் தன்னிறைவு பெற்றவை. அவற்றிடம் என்ன உள்ளதோ அதை வைத்து சிறப்பாக இயங்கும். கோழிகள் பறக்காது; கொக்கு பறக்கும். கோழி, கொக்கை பார்த்து பொறாமைப்படுமா... நத்தை மணிக்கு 0.002 கி.மீ., நகரும். சிறுத்தையோ, மணிக்கு, 115 கி.மீ., வேகத்தில் சீறி பாயும்.நத்தை, சிறுத்தையை பார்த்து பொறாமைப்படுமா... தாவர பட்சிணிகள், மாமிசம் சாப்பிடும் விலங்குகளைப் பார்த்து பொறாமைப்படுமா...பாம்புகளுக்கு, முன்னங்கால், பின்னங்கால் இருந்தால், பல்லி, உடும்பு போல காட்சியளிக்கும். பாம்பு இல்லாத உலகம் பாழ். பாதுகாப்பாய் இருந்து, பாம்புகளை பாதுகாப்போம்!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.