இளஸ் மனஸ்! (217)
அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது, 12; பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவன். எனக்கு பூனைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவை, 15ம் மாடியிலிருந்து தரைக்கு குதித்து, எவ்வித காயங்களும் இல்லாமல் அப்படியே நடந்து சென்று விடுகின்றனவே... எப்படி...பூனைகளுக்கு ஒன்பது உயிர்கள் என்பது உண்மையா... மனிதர்கள், 10 அடி உயரத்திலிருந்து குதித்தால் கூட, மரணக்காயப்பட்டு விடுகின்றனர். இது ஏன்... என் கேள்விகளுக்கான பதில்களோடு, பூனைகள் பற்றிய அரிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆன்டி...இப்படிக்கு,எம்.சையது குதுப்.அன்பு மகனே...வீட்டு பூனைகளின் விஞ்ஞான பெயர், 'பெலிஸ் கேட்டஸ் டொமஸ்டிகா' ஆகும். இது, பாலுாட்டி இனத்தை சேர்ந்த ஊனுண்ணி. பூனைகள் ஒருநாளில், 70 சதவீதம் நேரத்தை துாங்கியே கழிக்கின்றன. ஒரு உணவை மும்முறை ருசித்து, சோதித்த பின்னே உண்ணும். அவை, உள்ளங்கால் வழியாக, வியர்வையை வெளியேற்றுகின்றன.இனிப்பை, பூனைகளால் ருசிக்க முடியாது. பெண் பூனைகள், மோலி அல்லது ராணி என அழைக்கப்படுகின்றன. பூனைகளால், கடல் நீரை குடிக்க முடியும். பாலுாட்டி மற்றும் பறவையினங்களில், 33 வகை பூனைகளால் வேட்டையாடப்பட்டு அழிந்து போயிருக்கின்றன.உயரமான இடத்திலிருந்து ஒன்பது முறை குதித்தாலும், ஒன்பது முறையும், உயிர் தப்பும் என்பதை தான், பூனைக்கு ஒன்பது உயிர் என மக்கள் குறிப்பிடுகின்றனர்.பூனை விழும் போது, தரையை அடைவதற்கு இடையே உள்ள குறைவான நேரத்தில் தான், உடலின் நிலையை மாற்றி கொள்ள முடியும். மனிதர்களுடன் ஒப்பிடுக்கையில், பூனைகள் மிக எடைக் குறைந்தவை. கால்களால் ஒரு ஹெலிகாப்டரை போல, 'லான்ட்' ஆகின்றன.உயரத்திலிருந்து விழும் போது, பக்கவாட்டில், கால்களை விரித்துக் கொள்கிறது. உடல் பரப்பு தட்டையாக இல்லாமல் அகலமாக மாறுவதால், கீழிருந்து காற்றும், அதன் உடலை தள்ளுகிறது. அதிர்ச்சியை தாங்கும் அளவிற்கு, பூனைகளின் கால்கள் நெகிழ்வாக உள்ளன. தசைகளும், எலும்புகளை சுற்றியுள்ள தசைகளும் பெரிய அளவு அதிர்ச்சியை தாங்கி கொள்ளும் அளவிற்கு அமைந்துள்ளன.வேகமாக செயல்படும் திறன், முன் ஜாக்கிரதை உணர்வு, ஆபத்தின் போது எதிர்வினை ஆற்றுவது பூனைகளிடம் அதிகம் காணப்படுகிறது. அதேசமயம், மனிதர்கள் விழும் போது கட்டுப்பாட்டை இழக்கின்றனர். உடல் கட்டுப்பாட்டில் இல்லாமல் போவதால் விழுந்தவுடன், எலும்புகள் உடைந்து நொறுங்குகின்றன. உள்ளுறுப்புகள் காயப்படுகின்றன. அதிர்ச்சியில் இதய துடிப்பு அதிகரிக்கிறது.கட்டடம் விட்டு கட்டடத்தை இரவு வேளையில் தாண்டி, இரை தேடும் பூனைகளுக்கு விசேஷ சக்தி இருப்பது நியாயம் தானே!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.