இளஸ் மனஸ்! (218)
அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது, 10; பிரபல தனியார் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும் மாணவன். சக நண்பர்கள் யாரையாவது வீட்டருகே கண்டால், 'அவனிடம் பேசாதே... அவன் மிகப்பெரிய வில்லன்...' என எச்சரிப்பர், பெற்றோர். சினிமா பார்த்து வரும் பெரியோர், 'வில்லன் கேரக்டர்ல நடிச்சு அசத்திட்டான்...' என வாய் பிளப்பதை கண்டிருக்கிறேன். இந்த, 'வில்லன்' என்ற வார்த்தை எப்படி வந்தது. அதற்கு தமிழில் மாற்று வார்த்தை உள்ளதா... விவரித்து கூறுங்கள் ஆன்டி...இப்படிக்கு,எம்.ஆர்.வாமனன்.அன்பு மகனுக்கு...ஆங்கிலோ பிரெஞ்ச் அல்லது பழைய பிரெஞ்ச் மொழியில் உள்ள வார்த்தை தான் வில்லன். கி.பி., 1,300 புழங்கிய லத்தீன் மொழி வார்த்தையான, 'வில்லனஸ்' என்பது மருவி, 'வில்லன்' ஆகியது. அதை தீகுணன் என்றும் சொல்வர்.இந்த சொல்லுக்கு, பாவி, போக்கிரி, கொள்ளையன், திருடன், வீணன், ரவுடி, அயோக்கியன், முரடன், மோசடிக்காரன், குறும்பன் என, பல பொருள் உண்டு.ஒரு புத்தகத்தில், நாடகத்தில் அல்லது திரைப்படத்தில் பிறருக்கு தீமை செய்பவன், சட்டத்தை மீறுபவன், கொடூரம் மிக்க அடியாளாக வரும் கதாபாத்திரமே வில்லன் எனப்படும். அந்த வில்லன் செய்யும் குற்றங்களை நியாயப்படுத்தி எப்போதுமே பேசுவார்.ஐரோப்பாவில் புகழ் பெற்ற நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், தான் உருவாக்கிய, 'ஹாம்லெட்' என்ற நாடகத்தில், ஒரு வசனம் எழுதி இருப்பார்...'யார் ஒருவன் அசந்தர்ப்பமாய் சிரிக்கிறானோ, மேலும் சிரிக்கிறானோ அவனே வில்லன்...'தமிழகத்தின் வட மாவட்டங்களில் நடக்கும் தெருக்கூத்து நாடகங்களில், ஹீரோவை, 'ராஜபார்ட்' என்றும், வில்லனை, 'கள்ளபார்ட்' என்றும் ஹீரோயினை, 'ஸ்திரிபார்ட்' என்றும் காமெடியனை, 'கட்டியங்காரன்' என்றும் கூறுவர். காமெடியனுக்கு, 'சூத்திரதாரி' என்ற பெயரும் உண்டு.தமிழ் சினிமாவில், வில்லன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர்கள் பட்டியல் மிகப் பெரியது. அதில், நடிகர்கள் எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், எம்.ஆர்.ராதா, பி.எஸ்.வீரப்பா, ராதாரவி, நாசர், ரகுவரன், பிரகாஷ் ராஜ், சுமன், எஸ்.ஜே.சூர்யா, பகத் பாசில், ஆஷிஷ் வித்யார்த்தி என நீண்டிருக்கிறது.நடிகர் ரஜினிகாந்த் வில்லனாக நடித்து புகழ் பெற்ற பின், சூப்பர் ஸ்டாராக மிளிர்ந்தார். நடிகர் சத்யராஜும் ஆன்டி ஹீரோவாக ஜொலித்து, பின் குணசித்திர வேடத்துக்கு தாவினார்.கதைகளில் வரும் பெண் வில்லன்களை, 'வில்லி...' என அழைப்பர். நடிகை ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.செல்லம்... சினிமாவிலும், சீரியல்களிலும் தான், தனிப்பட்ட வில்லன்கள் இருப்பர். நிஜ வாழ்க்கையில், பல நேரங்களில் குணசித்திர நடிகர்களாக, சில நேரங்களில் வில்லன்களாக, அபூர்வமாக, சில நேரங்களில், ஹீரோவாக இருக்கிறோம். திருமணமான ஆண்கள், காமெடியன்களாக இளிக்கின்றனர். சொந்த துக்கங்களை மறைத்து, பிறரை சிரிக்க வைக்கும் கோமாளியாக இருப்பது மிகவும் சிறப்பான செயல்முறை!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.