ஜிம் பாடி!
நண்பனின் கல்யாண ரிசப்ஷனுக்கு ரெடியாகி வந்த மனைவி மாலதியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்தான் கார்த்திக்.கல்யாணத்தின்போது ஸ்லிம்மா த்ரிஷா மாதிரி உடம்பு, சங்குக் கழுத்து, துடி இடை, அன்ன நடை என்று தேவதை போல் இருந்தாள்.தன் நண்பர்கள் எல்லாரும், 'டேய் கொடுத்து வச்சவன்டா... இப்படி தேவதை போல மனைவியா?' என பெருமூச்சு விட்டதை நினைத்து நினைத்து, பெருமைப்பட்டான்.அவளுடன், திருமணம், வெளியூர் எங்கு சென்றாலும் பெருமையுடன் செல்வான். வழியில் வருவோர், போவோரின் பார்வை மாலதியை பட்டு திருப்பும்போது குஷியாக இருப்பான்.ஆனால், இப்போ...ஒரு குழந்தை பிறந்து தாயான பின் இவளிடம்தான் எத்தனை மாற்றம்! பருத்த உடல், கனத்த முகம், உருண்டை கழுத்து என பீப்பாய் போல ஆகிவிட்டாளே...மீதிக் காலம் முழுவதும் இந்தக் குண்டு மாலதிவுடன்தான் வாழ வேண்டுமா? என நினைக்கும் போதே அதிர்ச்சியாக இருந்தது கார்த்திக்குக்கு.''என்ன ஒரே சிந்தனை; கல்யாண ரிசப்ஷனுக்கு நேரமாகி விட்டது, வாருங்கள் போகலாம்,'' என்று அழைத்தாள் மாலதி.இருவரும் கல்யாண மண்டபத்திற்கு சென்றனர். அங்கே தன்னுடைய நண்பன் வசந்த்தை பார்த்து, பரவசப்பட்டான் கார்த்திக்.''ஹாய் வசந்த்! என் கல்யாணத்துல பார்த்தது... அதோட இப்போதான் வர்றே. மும்பையில இருந்து எப்போ வந்தே?'' என்று கேட்டான் கார்த்திக்''நேத்துதாண்டா. நீ என்னடா, கல்யாணத்தப்போ பார்த்ததுக்கு இப்போ ஆளே மாறிட்டே?'' என்றான் வசந்த்.''மாறிட்டேனா... எப்படி?'' என்று கேட்டான் கார்த்திக்.''ஜிம் பாடி, சூப்பர் ஹேர்ஸ்டைல்னு நம்ம செட்லயே ஹீரோ மாதிரி இருப்பே! இப்போ முன் வழுக்கை விழுந்து, தொப்பை போட்டு, இவ்ளோ சீக்கிரத்தில் அங்கிள் மாதிரி ஆயிட்டியே!'' என்றான் வசந்த்.மனைவி மட்டுமில்லை... தானும் மாறியிருப்பது அப்போதுதான் உறைத்தது கார்த்திக்குக்கு.