கூட்டுப் பிரார்த்தனை மூலம்...
காஞ்சிபுரத்தில், பிரபல மெட்ரிக் பள்ளியில், தமிழாசிரியையாக பணியாற்றிய போது நடந்த சம்பவம். கடந்த, 2005ல், 7ம், வகுப்பிற்கு வகுப்பாசிரியையாக இருந்தேன். என் வகுப்பில், ஏறக்குறைய, 40 மாணவியர் படித்தனர்.அதில், ஹேமலதா என்றொரு மாணவி, குடும்பத்தோடு, திருப்பதி சென்று திரும்பும் போது, தனியார் பேருந்தில் விபத்துக்குள்ளாகி, அவள் குடும்பத்தில் சிலர் இறந்து விட்டனர். இம்மாணவிக்கு, மிகுந்த உடல் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சுயநினைவின்றி பல நாட்கள் இருந்தாள்.அதை கேட்டு வகுப்பு மாணவியர், முதல்வர், ஆசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியுற்றோம். பள்ளிக்கு அருகிலேயே அவளது பாட்டி வீடு. அந்த வீட்டை கடந்து தான், என் வீட்டிற்கு செல்ல வேண்டும்.பள்ளியில் தினமும், அந்த மாணவிக்காக, ஐந்து நிமிடம் கூட்டு பிரார்த்தனை செய்தோம்.ஒருநாள், இருநாள் அல்ல... ஏறக்குறைய, 50 நாட்கள் செய்தோம். முதுகு எலும்பில் அடிபட்டு, கோமாவிற்கு சென்று, காப்பாற்றுவது சிரமம் என, கூறிய நிலையில், ஒன்றரை மாதத்திற்கு பின், அம்மாணவி சுயநினைவிற்கு வந்து பேச துவங்கினாள். இந்த செய்தி அறிந்து அனைவரும் மகிழ்ந்தோம்.அடுத்த, 15 நாட்களில், அப்பெண் பூரண குணம் பெற்று பள்ளிக்கே வந்துவிட்டாள். அன்று காலை, அப்பெண்ணின் அம்மா என் கையை பற்றி, 'ஒன்றரை மாதமாக நீங்களும், உங்கள் மாணவியரும் செய்த பிரார்த்தனை பலித்து, மீண்டும் படிக்க வந்து விட்டாள்!' என கூறி, கண்ணீர் மல்கினார்.கூட்டு பிரார்த்தனைக்கு எத்தனை மகிமை என்பதை அன்றைய வகுப்பில், பல உதாரணங்களோடு மாணவியருக்கு விளக்கினேன்!- வி.பத்மாவதி, காஞ்சிபுரம்.