உள்ளூர் செய்திகள்

கென்யா மலை!

கென்யா நாட்டில் நைரோபியின் வடகிழக்கே 80 மைல் தொலைவில் கென்யா மலை அமைந்துள்ளது. பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் நாடு கென்யா. ஆனாலும் கென்யா மலையைச் சூழ்ந்துள்ள பகுதியில் எப்போதும் பனி படர்ந்து பனித்தூள் விழுந்து கொண்டிருக்கும். ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்று கென்யா மலை. அவிந்து போன எரிமலையோடு கூடிய இதன் உயரம் 17,058 அடிகள். கென்யா மலை முடியைச் சுற்றி ஏராளமான மலை முடிகள் உள்ளன. இவற்றின் உச்சியிலிருந்து ஏராளமான பனிக்கட்டி ஆறுகள் (கிளேஸியர்) உருவாகின்றன. இவற்றில் மிகப்பெரியவை கிரகரி, லூயி. ஒவ்வொன்றும் ஒரு மைல் நீளமுள்ளவை.இவற்றின் உயர்ந்த பள்ளத்தாக்குகளில் சில ஏரிகளும் உண்டு. ஏராளமான ஓடைகளுக்கு இந்த ஏரிகள் நீர் வழங்குகின்றன. கென்யா மலையின் மிகப் பெரிய ஏரி ஹானஸ் ஏரி.கம்பீரமான இம்மலைமுடியை எட்டிப் பிடிக்கப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் வெற்றி கண்டவர் 1899-ல் ஜே.ஜே.மாகிண்டர்.கென்யா மலையின் தாழ்வான சரிவுகள், அடர்ந்த காடுகளால் மூடப்பட்டிருக்கும். இக்காடுகள் 7 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் காணப்படுகின்றன. இங்குள்ள மரங்கள் முக்கியமாக ஜுனிபர் மற்றும் ஏராளமான மூங்கில்கள். காண்டா மிருகம், சிங்கம், யானை, பாபூன் போன்ற காட்டு மிருகங்களும் ஏராளம். இக்கானகத்தில் விசேஷமான ஒரு ஓட்டல் உண்டு. 'ட்ரீ டாப்ஸ்' என்று பெயர். மரக்கிளைகளில் மீதாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ஓட்டல். கிளைகளின் உச்சாணியில் அமர்ந்தபடி காட்டு விலங்குகளை இயற்கைச் சூழலில் கண்டு ரசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !