கடைசி பக்க ரகசியம்...
கோவை, ராமநாதபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!வகுப்பில், விருப்பப் பாடமாக, கணக்கு பதிவியல் எடுத்து இருந்தேன். கணக்கு பதிவியல் நோட்டு, சில நாட்களில் தீர்ந்து போனது; ஏழ்மையால் புதிய நோட்டு வாங்க முடியவில்லை. அன்று அதன் விலை, எட்டு ரூபாய் தான் இருக்கும். அதையே வாங்க முடியாத நிலை. அதனால், வெள்ளைப் பேப்பர் வாங்கி, பழைய நோட்டின் கடைசி பக்கத்தில் தைத்து, அதில் தற்காலிகமாக பாடங்களை எழுதி வந்தேன்.எழுதியதை சரிபார்த்து கையெழுத்துப் போட, ஆசிரியர் நோட்டை வாங்கி பார்த்தார். கையெழுத்துப் போட்டு, எதுவும் சொல்லாமல் என்னிடம் கொடுத்து விட்டார்.'வெள்ளைப் பேப்பர் ஒட்டியிருந்ததைப் பார்த்து, ஆசிரியர் திட்டுவார்' என பயந்திருந்த நான் நிம்மதி அடைந்தேன். அடுத்த நாள், கணக்கு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது, என்னை அழைத்த ஆசிரியர், இரண்டு குயர், புதிய கணக்கு பதிவியல் நோட்டை கொடுத்தார். என் ஏழ்மையை புரிந்து, நேரத்துக்கு உதவிய, பரந்த உள்ளம் கொண்ட ஆசிரியரை நினைத்து, இன்றும் பூரிப்பு அடைகிறேன்.- ஆ.ராஜேந்திரன், கோவை.