கற்றதும் பெற்றதும்!
மதுரை, நிர்மலா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1965ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது ஒவ்வொரு நாளும் சீருடை அணிந்திருக்க வேண்டும். விளையாட்டு பயிற்சியின் போது, தாவணியை சீராக உடுத்தி கலையாமலிருக்க, 'பின்' குத்தியிருப்பேன்.கேள்வி - பதில்களை மனப்பாடம் செய்ய உதவும், 'கைடு' என்ற வழிகாட்டியை பயன்படுத்த தடை விதித்து, 'வகுப்பறையில் நடத்துவதை கவனித்தால் போதும்...' என உரைப்பார், ஆங்கில ஆசிரியை ராஜம். பாடப் புத்தகத்தில் சொற்களை தேர்வு செய்து, வாக்கியங்கள் அமைக்க சொல்வார். அந்த பயிற்சியை ஊக்குவிக்க, தனி மதிப்பெண் வழங்குவார். இதனால், ஹிந்தி மொழியும் எழுத பழகியிருந்தேன்.அன்றாடம் செய்தித்தாள் வாசித்து, முக்கியமானவற்றை சிவப்பு மையால் கோடிட்டு காட்டுவார். அறிவிப்பு பலகையில் சாக்பீசால் அதை எழுதுவேன். அது பழக்கமாகி, ஆங்கில மொழி பாடத்தில், ஆண்டு இறுதி தேர்வில், பள்ளி அளவில் முதன்மை மதிப்பெண் பெற வழிகோலியது.என் வயது, 76; இல்லத்தரசியாக இருக்கிறேன். ஆழ்வார்கள் பாசுரம் பாடிய திவ்ய தேசங்களுக்கு வழிகாட்டி நுால் எழுதியுள்ளேன். ஆழ்வார்கள் வரலாறு, தினமும் திவ்ய பிரபந்தம் என, வானொலியில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளேன். அவற்றை தொகுத்து, 12 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.வீட்டருகே கோவில் அறிவிப்பு பலகையில், மகான்களின் மணிமொழியை எழுதுவதை அன்றாட வழக்கமாக்கியுள்ளேன். இவற்றுக்கு பயிற்சி தந்த, அந்த ஆசிரியையை வணங்கி மகிழ்கிறேன்.- கே.ஜோதி, மதுரை.