குடியரசை போற்றுவோம்!
ஜனவரி 26, இந்திய குடியரசு தினம்இந்தியர் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது, குடியரசு தினம். நம்மை வழி நடத்தும் அரசியல் சட்டம் அமலுக்கு வந்த நாள்.இந்தியாவிற்கு, தனி அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் கருத்தை, எம்.என்.ராய், 1927ல் வெளிப்படுத்தினார். தொடர்ந்து, காங்கிரஸ் மாநாடுகளில் விவாதிக்கப்பட்டது.அப்போது, இந்தியாவை ஆண்ட ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், 1945ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தொழிற்கட்சி தலைவர் கிளமன்ட் ரிச்சர்டு அட்லி பிரதமரானார். தன் அமைச்சரவைத் துாதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பினார். இந்தக் குழு, இந்தியாவுக்கு பிரத்யேக அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதன் அவசியத்தை பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. சபையின் முதல் கூட்டம், டிச., 9, 1946ல் நடைபெற்றது. அரசியல் நிர்ணய சபை தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் இருந்தார். அரசியலமைப்பு வரைவுக் குழு தலைவராக டாக்டர் அம்பேத்கர் செயல்பட்டார். சட்டத்தில், தேசிய ஒருமைப்பாடு என்ற கருத்தை கொண்டு வந்தவர் ஓவியர் நந்தலால் போஸ்.சட்டத்தை உருவாக்க, இரண்டு ஆண்டுகள், 11 மாதம், 10 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்திய முதல் குடியரசு தலைவராக, ராஜேந்திர பிரசாத் ஜன., 14, 1950ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அந்த பதவியை ராம்நாத் கோவிந்த் வகிக்கிறார்.குடிமக்கள் அரசு, மேலும் வலுப்பட பாடுபடுவோம்.முதல் விதை!மனபேந்திர நாத் ராய் என்ற எம்.என்.ராய், இந்தியா விடுதலைக்காக பாடுபட்ட சிந்தனையாளர். பொதுவுடமைக் கொள்கை மீது நம்பிக்கை கொண்டவர்.மேற்கு வங்க மாநிலம், ஆர்பிலியா கிராமத்தில், மார்ச் 21, 1887ல் பிறந்தார். பொறியியல், வேதியியல் கற்று தேர்ந்தார். சொந்த முயற்சியால் சட்ட அறிவைப் பெருக்கிக்கொண்டார்.பங்கிம் சந்திர சட்டர்ஜி, சுவாமி விவேகானந்தர் எழுத்துக்களைப் படித்து தேசிய உணர்வு பெற்றார். இந்திய விடுதலைக்கு, ஆயுதப்புரட்சியே உகந்தது என நம்பினார்.உலக அளவில் தொழிலாளர் சட்டங்களில் ஆழ்ந்த அறிவு பெற்றவர். இந்தியாவுக்கு, தனி அரசியல் அமைப்பு சட்டம் தேவை என்பதை, முதன்முதலில் வலியுறுத்தினார். அரசியலமைப்பு!உலகின் மிகப்பெரிய குடியரசு நாடு இந்தியா. இதன் அரசியலமைப்பு சட்டம் பற்றி பார்ப்போம்... இது...* உலகிலேயே மிக நீளமானது* நெகிழாத்தன்மையுடன், நெகிழ்ச்சித் தன்மையும் உடையது* கூட்டாட்சியும், ஒருமுகத்தன்மையும் கொண்டது* பொறுப்புள்ள அரசை வழி நடத்துகிறது. அரசியல் கொள்கைகள், அரசு நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறை, அடிப்படை உரிமைகள், குடிமக்களின் கடமைகளை உள்ளடக்கியுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில்...* 25 பிரிவுகள்* 12 அட்டவணைகள்* 448 உட்பிரிவுகள்* 1 லட்சத்து, 17 ஆயிரத்து, 369 சொற்கள் உள்ளன. அரசியல் அமைப்பு சாசனம் ஆங்கிலப் பதிப்பாக உள்ளது. அதிகாரப்பூர்வ ஹிந்தி மொழி பெயர்ப்பையும் கொண்டுள்ளது. இதை உருவாக்கும் பணி, ஆகஸ்ட் 29, 1947ல் இந்திய அரசமைப்பு நிர்ணய சபையால் துவங்கப்பட்டது. முழுமையடைந்த சட்டம், ஜனவரி 26, 1950ல் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் ஒருங்கிணைந்த, தன்னாட்சியுள்ள, குடியரசாக மலர்ந்தது இந்தியா. மக்களாட்சிக் கோட்பாட்டின்படி இயங்குகிறது.