உள்ளூர் செய்திகள்

பையை காணோம்!

ஏழை நம்பூதிரி ஒருவர் தம் மகளின் திருமணத்திற்குப் பொருள் தேட நினைத்தார். பல ஊர்களுக்குச் சென்று உதவி கேட்டார். ஓரளவு பொருள் சேர்ந்தது.தன் ஊருக்குப் புறப்பட்டார். போகும் வழியில் உயர்ந்து நின்ற கோபுரம் அவரை அழைத்தது. இறைவனை வழிபட்டுச் செல்லலாம் என்று கோவிலுக்குள் சென்றார்.அங்கிருந்த திருக்குளத்தில் தண்ணீர் பளிங்கு போலத் தெளிவாக இருந்தது. நாலா பக்கமும் பார்த்தார். யாரும் இல்லை.நீராடிவிட்டுச் செல்லலாம் என்று பணப்பையைக் கரையில் வைத்தார். குளத்தில் இறங்கினார். குளிர்ந்த தண்ணீரில் தன்னை மறந்து நீண்ட நேரம் நீராடினார்.கரை ஏறிய அவர் பணப் பையைக் காணாது திகைத்தார்.'பாடுபட்டுச் சேர்த்த பணம் திருடு போய் விட்டதே... என்ன செய்வேன்?' என்று அழுது புலம்பினார்.அந்த ஊரிலேயே தங்கினார் அவர். மகளின் திருமணத்திற்குப் பணம் சேர்த்தார்.இரண்டு மாதங்கள் சென்றன.அவரைப் பார்த்த கோவில் பூசாரி, ''இன்று எங்கள் வீட்டில் விருந்து. நீங்கள் சாப்பிட வர வேண்டும்,'' என்று அன்புடன் அழைத்தார்.அவரும் பூசாரியின் வீட்டிற்குச் சென்றார்.பூசாரியின் மனைவி அவருக்கு உணவு பரிமாறினாள்.சாப்பிடத் தொடங்கிய அவர், ''அம்மா! என் மகளின் திருமணத்திற்காக பணம் சேர்த்தேன். அந்தப் பணப் பையைக் கோவில் குளக்கரையில் வைத்துவிட்டு நீராடினேன். என் கெட்ட நேரம். பணப் பை திருடு போய் விட்டது. மகளின் திருமணத்திற்காக பணம் சேர்க்க அல்லாடுகிறேன்,'' என்று தன் கதையைச் சொல்லிப் புலம்பினார்.அறைக்குள் சென்ற பூசாரியின் மனைவி, கையில் பணப் பையுடன் வந்தாள்.''இது உங்கள் பணப் பையா? பாருங்கள்,'' என்றாள்.''என் பணப் பைதான்,'' என்று ஆர்வத்துடன் வாங்கினார் அவர். அதில் இருந்த பணத்தை எண்ணினார். சரியாக இருந்தது.''அம்மா! இந்தப் பணப்பை உங்களிடம் எப்படி கிடைத்தது?'' என்று கேட்டார்.''நீங்கள் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தீர்கள். கரையில் மேய்ந்து கொண்டிருந்த மாடு சாணம் போட்டது. அந்தச் சாணத்திற்குள் பணப் பை முழுவதும் மறைந்து விட்டது. கரை ஏறிய நீங்கள் பணப் பை திருடு போய் விட்டதாக நினைத்தீர்கள். சாணம் எடுக்க வந்த என்னிடம் பணப் பை கிடைத்தது. உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்று காத்திருந்தேன்,'' என்றாள் பூசாரி மனைவி.''அம்மா! இந்தப் பணம் கிடைக்காது என்றே நினைத்தேன். இதில் பாதிப் பணத்தை உங்களுக்கு அன்பளிப்பாக தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்,'' என்றார் அவர்.''எங்களுக்கு எதுவும் வேண்டாம். உங்கள் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துங்கள்,'' என்றாள் பூசாரி மனைவி உணர்ச்சிப் பெருக்கில் தன்னை மறந்தார் நம்பூதிரி.''அம்மா! அடுத்த ஆண்டு உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையால் இந்த நாடே புகழ் பெறும்,'' என்று வாழ்த்தினார்.அவர் வாழ்த்தியது போலவே, அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தையே புகழ்பெற்ற புலவர் குஞ்சன் நம்பியார் ஆவார். அவரால் கேரள நாடே புகழ் பெற்றது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !