பொய்!
'தேவர்கள் உண்ணும் அமிர்தத்தை உண்டால் சாக வேண்டியதில்லை...' என்ற உண்மையை அறிந்த ஒருவன், நீண்ட தவம் செய்தான். ''உனக்கு என்ன வரம் வேண்டும்...'' என்றார் கடவுள்.''ஒரு குடம் நிறைய அமிர்தம் வேண்டும்...''''சரி தருகிறேன்... அதை, தரையில் வைத்தால் பலன் கிடைக்காது...'' வெள்ளி குடம் நிறைய, அமிர்தத்தை கொடுத்த கடவுள், மறைந்து விட்டார்.மகிழ்ச்சியில், 'அமிர்தம் வாங்கிய பெருமையை, பலர் அறிய கூறி, எவருக்கும் கொடுக்காமல், தான் மட்டும் குடிக்க வேண்டும்' என நினைத்து, அமிர்த கலசத்தை தலையில் சுமந்தபடி நடந்தான்.குறுக்கே சிற்றாறு வந்தது.ஆற்றை கண்டதும், வயிறு தொல்லை செய்தது; சற்று மறைவாக ஒதுங்க நினைத்தான்.அப்போது, ஆற்றின் பக்கம் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.அவனிடம், அமிர்த குடத்தை கொடுத்து, சிறிது நேரம் தலையில் வைத்திருக்கும்படி வேண்டினான். ஆனால், குடத்தில் உள்ள அமிர்தம் பற்றி சொல்லவில்லை. ''சரி வைத்திருக்கிறேன்...'' என்றான், புதியவன்.அதை திறந்து குடித்து விடுவானோ என்ற சந்தேகத்தில், ''அப்பனே... குடத்தில் விஷம் உள்ளது; அதாவது, ஆலகால விஷம். இதை மருந்துக்காக எடுத்துப் போகிறேன்; தரையில் வைத்தால், சக்தி போய் விடும்; எனவே, தலையிலேயே வைத்திரு...'' என கூறி, தொலைவில் நின்ற பனைமரங்களை நோக்கி நடந்தான்.தலையில் ஆலகால விஷத்தை சுமந்து நின்றவனுக்கு, மூளை வேலை செய்தது.அவனோ, 30 ஆண்டுகள் வயிற்று நோயால் அவதிப்படுகிறான். ஆற்றில் விழுந்து, இறந்து போக வந்திருந்தான். அப்படி வந்தவனுக்கு யோகம் அடித்தது.அதாவது, ஒரு குடம் நிறைய ஆலகால விஷம் கிடைத்திருக்கிறது. சும்மா இருப்பானா... குடத்தை திறந்து, ஒரு சொட்டு விடாமல், 'மட... மட...' என, குடித்து முடித்து ஆற்றிலே விழுந்தான்.திரும்பி வந்தவன், குடம் தரையில் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டான். அதை சுமந்து நின்றவன், தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தான்.''சுவாமி... நான் தீராத வயிற்று வலிக்காரன்; தாங்கள் கொடுத்த விஷம் அடியேன் வயிற்று வலியை நீக்கி விட்டது. நான், இறக்க நினைத்து, ஆற்றில் விழ வந்தேன். விஷம் கிடைத்ததால், அதைக் குடித்து செத்து போக நினைத்தேன்; ஆனால், நீங்கள் கொடுத்த விஷம் என் நோயிலிருந்து என்னை காப்பாற்றி விட்டது... நன்றி!'' வந்தவன் அதிர்ந்து நின்றான்.குட்டீஸ்... உண்மையை திரித்து, சொன்னால், நமக்கு எதிராக மாறும் என, புரிந்து கொண்டீர்களா...