உள்ளூர் செய்திகள்

கலா சொல்வதைக் கேளுங்க!

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள, அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.வெள்ளிக்கிழமை கடைசி வகுப்பு நீதி போதனை. ஆனால், நாங்கள் விளையாடச் சென்று விடுவோம்.வகுப்பாசிரியர், பள்ளி நுாலகத்தில் இருந்து, புத்தகங்களை எடுத்து படிக்கச் சொல்வார்; நாங்கள் அதைக் கேட்டால் தானே!இந்நிலையில், நுாலக பொறுப்பாளராக, புதிய ஆசிரியை ஒருவர் வந்தார்.'நுாலகத்திற்கு வந்து யார் எந்த புத்தகம் வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம்; கூடவே, பொது அறிவு புத்தகம் ஒன்றை கண்டிப்பாக படிக்க வேண்டும்; அதிலிருந்து, நான் சில கேள்விகள் கேட்பேன்; சரியாக பதில் கூறினால் பரிசு தருவேன்...' என்றார்.அப்போதெல்லாம், நுாலகத்தின் பயனோ, முக்கியத்துவமோ எங்களுக்குத் தெரியாது. கடமைக்கு நுாலகம் சென்று, ஆசிரியர் கட்டாயப் படுத்தியதால், பொது அறிவு நுால் ஒன்றை பாடப்புத்தகம் போல் உரு போட்டேன்.என் கையில் இருந்த புத்தகத்தை வாங்கி, சில கேள்விகள் கேட்டார். நான் கூறிய பதில் சரியாக இருக்கவே, ரப்பருடன் இணைந்த பென்சிலை பரிசாக கொடுத்தார்; இந்த பென்சில் விலை அதிகம் என்பதால், வீட்டில் வாங்கி தரமாட்டார்கள்; அந்த பென்சில் பரிசாக கிடைத்ததில் திக்குமுக்காடி போனேன்.அப்போதிலிருந்து, நீதி போதனை வகுப்பு எப்போது வரும் என்று காத்திருந்து, தோழிகளுடன் நுாலகத்திற்குள் நுழைந்து, புத்தகங்களைப் பிரித்து, மேய ஆரம்பித்தோம். கல்லுாரி சென்ற பின்னும், நுாலகத்திற்கு செல்லும் பழக்கம் இருந்தது.பல விஷயங்களைப் படித்து அறிந்ததால், தோழிகள் மத்தியில் எனக்கு மரியாதை கிடைத்தது. வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு சென்ற போது, படித்த நுால்கள் எனக்கு துணை புரிந்தன.புத்தகம் படிக்கும் ஆர்வத்தையும், பழக்கத்தையும் ஏற்படுத்திய அந்த ஆசிரியை விஜயத்தை, இன்று வரை மறக்க முடியவில்லை!- ஆர்.கலா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !