வாழ விடு வாழு!
திருப்போரூர் காட்டில் ஒரே பரபரப்பு நிலவியது. காட்டு விலங்குகள் ஒன்று கூடி கூட்டம் போடுவதற்கு தயாராக இருந்தன.'நீ சென்று நம் சிங்கராஜாவை பார். அவர் தான், சரியாக வழிகாட்டுவார்...' என்று கூட்டத்தில் சோகமாக இருந்த யானைக்கு ஆறுதல் கூறியது கரடி.விலங்குகள் அனைத்தும் யானைக்கு ஆதரவாக சிங்கராஜாவை சந்தித்தன.'என்ன... அனைவரும் ஒன்றாக வந்துள்ளீர். உங்களை காணும் போது, மகிழ்ச்சியாக இருக்கிறது; எல்லாரும் நலமா...' என்று விசாரித்தது சிங்கராஜா.'நலமாக தான் இருக்கிறோம். ஆனால்...' என்றவாறு தயக்கம் காட்டியது கரடி.'என்ன ஆனால்... ஏதாவது பிரச்னையா, தைரியமாக கூறு...''ஆமாம்... நேற்று காட்டையும், நம்மையும் காண்பதற்கு சுற்றுலா வந்த மனிதர்கள் தேவையில்லாத செயல்களில் ஈடுப்பட்டு தொந்தரவு ஏற்படுத்தியுள்ளனர்...' என்றது கரடி.'கரடி கூறுவது உண்மை தான்... நாம் எல்லாரும், மனிதர்களுக்கு பொருட்காட்சியாக மாறிவிட்டோமே தவிர, நம் பயன்களை அவர்கள் அறியவில்லை...' என்றன குரங்குகள்.ஆளாளுக்கு குமுறல்களை எடுத்துரைத்தன. உறுமியபடி அங்குமிங்கும் கோபத்துடன் நடந்து குறைகளை அறிந்தது சிங்கராஜா.'நேற்று நடந்த நிகழ்வை விரைந்து சொல்லுங்கள்...' என காடே அதிரும்படி கர்ஜித்தது சிங்கராஜா.'சுற்றுலா வந்தவர்கள் பயன்படுத்தி தேவையற்றது என கருதிய பிளாஸ்டிக் பை, குவளை, மீதமுள்ள உணவு என, அனைத்தையும் காட்டில் துாக்கி எறிந்துள்ளனர்; மனிதர்கள் சுற்றி பார்ப்பதற்கு வசதிகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, நம்மை சுற்றி மின்சார வேலியையும் அமைத்துள்ளனர்; அந்த வேலியில் யானையின் குட்டி சிக்கி இறந்து விட்டது...' என்று கவலையோடு கூறியது கரடி.அதை கேட்டவுடன், 'ஆறறிவு படைத்த மனிதர்கள் செய்யும் செயல் தானா இது. காடும், அங்கு வாழக்கூடிய உயிரினங்களும் நாட்டின் செல்வம் அல்லவா... இது தெரியாமல் காட்டை குப்பை தொட்டியாக கருதலாமா... அனைவரும் உயிர்ச்சங்கிலியின் பிணைப்புதானே...'இனிவரும் காலங்களில் சுற்றுலா வருவோருக்கு ஐந்தறிவுள்ள நாம் விழிப்புணர்வு பதாகைகளை காட்டி அறிவுறுத்துவோம்...' என்று ஆலோசனை கூறியது சிங்கராஜா.காட்டை பாதுகாப்பதற்கு உகந்த செயலில் ஈடுபட தயாராயின விலங்குகள்.குழந்தைகளே... தேவையற்ற உணவை கண்ட இடங்களில் வீசாமல் குப்பை தொட்டியில் போட வேண்டும்!- ந.மோகன்ராஜ்