உள்ளூர் செய்திகள்

ஆடம்பரம்!

அலுவலக வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ராஜேஷ் சற்று கடுகடுப்பாக இருந்தான். அலுவலக ஊழியர்களின் பொறுப்பற்ற செயலை கண்டு எரிச்சல் அடைந்திருந்தான்.செயல் எதுவாக இருந்தாலும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவன் ராஜேஷ்.போதாத குறைக்கு வீட்டில் நுழைந்த உடனே, வராண்டாவில் அழகுமிக்க சோபாக்களுக்கு நடுவே மரநாற்காலி இருப்பதை பார்த்ததும், கோபம் தலைக்கு ஏறியது.ஓய்வு பெற்ற அப்பா தான், வைத்திருப்பார் என எண்ணி, ''பழைய மரநாற்காலியை இங்கு ஏன் வைத்தீர். வராண்டாவின் அழகையே கெடுக்கிறது; இதை, பழைய சாமான்களோடு போடுங்கள்...'' என ஆத்திரத்துடன் கூறினான்.பழைய சாமான்களை சேர்த்து வைக்கிற அறையில் மரநாற்காலியை எடுத்து வைத்தார் முதியவர். இரண்டு நாளுக்கு பின், பேரன் சுனில், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த போது, ''வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கியதற்கு, மாவட்ட ஆட்சியர் கையால் பரிசு கிடைத்தது; அவர் கையால் பரிசு பெறும் புகைப்படத்தையும் எடுத்து வந்துள்ளேன்...'' என, தாத்தாவிடம் காட்டினான்.''இந்த புகைப்படத்தை சுவரில் பார்க்குற இடத்தில், ஆணி அடித்து மாட்டுங்கள்...'' என்றான்.''வயசு ஆகிடிச்சுல்ல; ஏறும் போது கீழ விழ நேரலாம்; அப்பாகிட்ட கேள்...'' என்றார் தாத்தா.துள்ளிக் குதித்து அப்பாவிடம் ஓடிச்சென்றான். அதை சுவரில் மாட்டச் சொல்லி அடம்பிடித்தான் சுனில். சுற்றும் முற்றும் பார்த்தவன், 'ஏறி ஆணி அடிக்க விலை உயர்ந்த சோபா உதவாது' என உணர்ந்தான் ராஜேஷ். பழைய சாமான்கள் அறையில் இருந்த மர நாற்காலியை எடுத்து வந்தான். அதில் ஏறி ஆணி அடித்த போது, ஓரக்கண்ணால் தந்தையை பார்த்தான் ராஜேஷ்.புன்னகைத்தபடியே, ''மரநாற்காலி... எதற்கும் உபயோகம் இல்லை என நினைத்தாய்; இன்று அதன் பயனை உணர்ந்திருப்பாய்... மரமாக நின்று, காய், கனிகளை வழங்கிய பின், நாற்காலியாக பயன்பட்டு வருகிறது; ஞானம், பொறுமை தான் மனிதனை வழி நடத்தி செல்கிறது. பொறுமையை பழகிக் கொள்...'' என்றார்.''மன்னியுங்கள்; ஆடம்பர பொருட்களை சேர்த்து, பொறுமையை இழந்து விட்டேன்...'' திருத்தி கொள்ள முன்வந்தான் ராஜேஷ்.குழந்தைகளே... பொறுமையை கடைப்பிடித்து அமைதியாக வாழ முயலுங்கள்! ஆர்.சண்முகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !